குறை சொல்றாங்களா? இது தளபதியின் ஆட்சி.. ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கலை! அமைச்சர் நேரு பெருமிதம்!
சென்னை : எதிர்க்கட்சியினர் குறைதான் சொல்லுவார்கள், ஆனால் இந்த ஆட்சி தளபதியின் ஆட்சி, சென்னையில் பல பகுதிகளில் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்காத அளவிற்கு ஓராண்டில் பணிகளை செய்து காட்டியது தான் முதல்வரின் மிகப்பெரிய சாதனை என அமைச்சர் கேஎன் நேரு கூறியுள்ளார்.
தொடர் மழை காரணமாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.
தொடர்ந்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் கே .என். நேரு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜான் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் கேஎன் நேரு
அதே போல் புதிதாக மழை தேங்கிய சரஸ்வதி நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிகால்வாய் முறையாக அமைக்கப்பட்டு மழை நீர் செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.. இதனை தொடர்ந்து ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதில் கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட படகு சேவைகளை மீண்டும் தொடங்கவும், அதன் வாயிலாக மாநகராட்சிக்கு தொடர்ந்து வருவாய் ஏற்படுத்த வலியுறுத்தினார்.

மழை நீர்
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, " மழைக்காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் மழை நீர் தேங்காமல் உள்ளது.. வடிகால்வாய் அமைக்கப்பட்டு மழை நீர் வெளியேறும் சூழலில் ஸ்ரீராம் நகர் வசந்தம் நகர் பகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் புதிதாக சரஸ்வதி நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது.

ஆக்கிரமிப்பு
அதோடு தனியார் கல்லூரி நிர்வாக தடுப்பு சுவர்களால் மழை நீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினர் கல்லூரி வளாகத்தை அளந்து அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு கண்டுப்பிடிக்கப்பட்டால் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு மழைநீர் சீராக செல்ல வழிவகை செய்யப்படும் புதிதாக மழைநீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும்" என தெரிவித்தார்..

தளபதி ஆட்சி
தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சியினர் குறைதான் சொல்லுவார்கள், ஆனால் இந்த ஆட்சி தளபதியின் ஆட்சி, கடந்த ஆண்டு பார்த்து சென்ற விட்ட பகுதிகளில் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்காத அளவிற்கு ஓராண்டில் பணிகளை செய்து காட்டியது தான் முதல்வரின் மிகப்பெரிய சாதனை" என்றார். இந்த ஆய்வில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, ஆவடி மாநகர மேயர் உதயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications