'உருமாறிய ஓமைக்ரான் கொரோனாவை.. தடுக்க தீவிர நடவடிக்கை..' ஏர்போர்ட்டில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சு
சென்னை: ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகை என்றும் பட்டியலிட்டுள்ளது. இது குறித்த ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமைச்சர் மா.சு ஆய்வு
இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்யப்படும் பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தென் ஆப்பிரிக்கா நாட்டில் புதிதாக ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாடுகளில் சர்வதேச விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

பரிசோதனை தீவிரம்
சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RT PCR பரிசோதனையும், காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக வருபவர்களையும், பல நாடுகளுக்குச் சென்று வருபவர்களைக் கண்காணிக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உதவி திட்ட அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். தென் ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேக்சின் போட்டிருந்தாலும் கூட
தமிழகம் வந்து 8 நாட்கள் ஆன பிறகு, மீண்டும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தியவர்களையும் கூட கண்காணித்து பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்த 55,090 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் பாதிப்பு தான் தற்போது வரை அதிகம் கண்டறியப்படுகிறது.

கமல் கொரோனா
தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், தொற்று பாதிப்பு வருகிறது, முழுமையாகத் தொற்று நீங்கவில்லை. கமல்ஹாசன் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கூட நலமாக உள்ளார். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் தீவிர கண்காணிப்பு அவசியம் என்பதால் மக்கள் நல்வாழ்வுத்துறை பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

12ஆவது மெகா தடுப்பூசி முகாம்
தடுப்பூசி, முககவசம் மட்டுமே எதிர்காலத்தில் பொதுமக்களைக் காக்கக்கூடிய ஆயுதங்கள். இதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் தேவையில்லை. நாளை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 12ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதிகளவில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இன்னும் 12 லட்சம் தடுப்பூசி தமிழகத்திற்கு விரைவில் வர உள்ளன.

நீட் தேர்வு
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறத் தொடர்ந்து முயன்று வருகிறோம். நீட் தேர்வு விலக்கு குறித்து ஆதரவு அளிக்க 12 மாநில முதல்வருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications