உயிரை பறித்த சென்னை பெட்ரோல் பங்க் மேற்கூரை.. மீட்பு பணியில் இருந்த சவால்! அமைச்சர் முக்கிய தகவல்
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் இன்று இரவில் திடீரென பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒருவர் இறந்த நிலையில் 6 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் விபத்து குறித்தும், மேற்கூரையை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் நெருங்காதது ஏன்? என்பது பற்றியும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்து வந்தது. சில வாகன ஓட்டிகள் அங்கு ஒதுங்கி நின்றனர்.

இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தன. இதனால் அதன் அடியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் மீட்கப்பட்டனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இறந்துள்ளார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் விபத்து நடந்த இடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெட்ரோல் பங்க் கூரை சரிந்து விழுந்து 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 30 வயது இளைஞர் மரணமடைந்துள்ளார். அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பு மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வருத்தமளிக்கிறது. தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சிஇஓவை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறோம்.
நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி எலக்ட்ரிக் கட்டர் கொண்டு இதனை வெட்டி எடுத்தால் தீப்பொறி உருவாகும். பெட்ரோல் இருப்பு உள்ளதால் பெரும் விபத்து ஏற்படலாம். இதனால் பிற துறைகளை தடுத்து இருக்கிறோம். எலக்ட்ரிக் கட்டர், ஹேண்ட் கட்டரை பயன்படுத்த வேண்டாம் என கூறியிருக்கிறோம்.
தீயணைப்பு துறை மற்றும் போலீசார் கிரேன் உதவியுடன் மேற்கூரையை தூக்கி பார்த்தனர். அப்போது அடியில் வேறு யாரும் சிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமாக உள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications