உதயநிதி ஸ்டாலினை ஏன் அமைச்சராக்க வேண்டும்.. அமைச்சர் சா.மு.நாசர் தந்த விளக்கம்
சென்னை : அயராது உழைக்கும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் என்ன தவறு என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அயராது உழைத்ததாலேயே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என திமுகவினரும் மற்ற அமைச்சர்களும் வலியுறுத்தி வருவதாகவும சா.மு.நாசர் குறிப்பிட்டார்.
ஓமிக்ரான் பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்து முடிவு எடுப்பார் என்று பால்வளத்துறை அமைச்சர் பேசி உள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதன் முறையாக எம்எல்ஏவாக பதவி ஏற்ற கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் வாய்ப்பு தந்த நிலையில் தனது மகனுக்கு இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தொகுதிப் பணிகளில் ஆர்வமுடன் களமிறங்கி செயலாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதனால் தற்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஒட்டுமொத்த திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யமொழி விருப்பம்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என குறிப்பிட்டார். இது தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல என்றும் மக்களின் விருப்பமும் அதுதான் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ள திறமைகள் ஒரு தொகுதி மக்களுக்கு மட்டும் சென்றடையக்கூடாது என்றும் என்றும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவருடைய திறமைகள் பயன்பட வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். ஒரு எம்.எல்.ஏ.வாக உதயநிதியின் செயல்பாடுகள் முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டை பெற்றுள்ளதால் தந்தை வைத்த பரீட்சையில் மகன் உதயநிதி வெற்றி பெற்று விட்டதாகவே கூறப்படுகிறது.

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விருப்பம்
இதேபோல் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை உண்டு. உதயநிதி ஸ்டாலின் ஒரு எம்எல்ஏ கடந்த ஆறு மாதங்களில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு எம்எல்ஏ எப்படி செயல்படவேண்டுமோ அப்படியே செய்ல்பட்டார். எனவே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தகுதி உண்டு. அவர் அமைச்சரானால் அந்த துறை நன்கு வளர்ச்சி பெற்று மக்களுக்கு பலன்கிடைக்கும் என்று தெரிவித்தார்.
Recommended Video

பால்வளத்துறை அமைச்சர் விருப்பம்
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் உதயநிதி ஸ்டாலினின் உழைப்பு அபாரமானது என்றும், மு.க.ஸ்டாலினுக்கு பிறகு மக்கள் மத்தியில் வசீகரமான தலைவராக அவர் உருவெடுத்து உள்ளதால் அமைச்சராவதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போதைய சூழலில் ஓமிக்ரான் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து முடிவுகளை அறிவிப்பார் என்றும் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications