என் பசங்களுக்கு நான் போன் கொடுப்பதில்லை! சோசியல் மீடியா பார்க்க விடுவதில்லை! அமைச்சர் பிடிஆர்!
சென்னை: உலகமே ஒரு சிறிய போனுக்குள் முடிந்துவிடுவதாக கருதும் பலரும் அக்கம் பக்கத்தினருடன் கூட பேசுவது கிடையாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள், மாணவர்கள் மட்டும் தான் இப்படி செய்கிறார்கள் என்றில்லை பெரியவர்களுமே போனுக்குள் தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொண்டு சமூகத்தில் மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார்கள் என வேதனைத் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர் மதுரையில் ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் தனது பசங்களுக்கு தாம் போன் கொடுப்பதில்லை என்றும் அதே போல் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் வாய்ப்பையும் கொடுப்பதில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். செல்போன் பயன்பாட்டின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றார்.
தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை எந்த மாநிலத்துடனும் நாம் போட்டிபோட அவசியம் கிடையாது என்றும் சென்னைக்கு வந்திருக்கு வேண்டிய நிறுவனம் வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டது என்றோ பேச வேண்டிய தேவை கிடையாது எனவும் கூறியிருக்கிறார். ஏனெனில் இந்தத் துறையில் அவ்வளவு வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
தாம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றிருப்பதாகவும் இன்னும் வரும் நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள் எனவும் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.












Click it and Unblock the Notifications