உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு.. பாஜக கொள்கை வழியில் அதிமுக.. அமைச்சர் பொன்முடி வருத்தம்!
சென்னை: அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது வருத்தம் அளிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று திமுக அறிவித்தது.
இதனிடையே 10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்படி 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

சீராய்வு மனு
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், பாமக, விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் பங்கேற்கவில்லை. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் இந்த கூட்டத்தில் 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

10 கட்சிகள் ஆதரவு
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மத்திய பாஜக அரசு அவசர அவசரமாக 10% இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாஜகவுக்கு சமூக நிதி கொள்கையில் நம்பிக்கை இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதிமுகவால் வருத்தம்
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. சமூக நீதி கொள்கையில் காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம்.

பாஜக வழியில் அதிமுக
ஏனென்றால் தமிழ்நாட்டில் 90% மக்கள் சமூக நீதி கொள்கைக்கு கீழ் வருவார்கள். மீதமுள்ள 10% பேருக்காக அதிமுக நிற்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளார்கள். பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கொள்கை அளவில் பாஜகவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லையா என்பது தெரியவில்லை என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications