சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணை.. உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் பொன்முடி உள்ளிட்டோர் மேல்முறையீடு
சென்னை: சொத்து குவிப்பு வழக்கிற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் மேல் முறையீடு செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போர்ட்ஃபோலியோ வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, எம்.எல்.ஏக்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் முறையாக விசாரிக்கப்படவில்லை எனக்கூறி,தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து வந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் விசாரணைக்கு ஆனந்த் வெங்கடேஷ் எடுத்தார் .
இந்த வழக்குகளின் விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "சொத்துக்குவிப்பு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை எல்லோரும் வில்லனாக பார்க்கின்றனர்." என கருத்து தெரிவித்திருந்தார்.
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இந்த வழக்குகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விசாரணைக்கு மீண்டும் வரவிருக்கின்றன. இதற்கிடையே, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மதுரை ஐகோர்ட் கிளைக்கு மாற்றப்பட்டார். அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதேபோல், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்.ஆர் ராமச்சந்திரனும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சியின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அதேபோல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதவி வகித்தார். அப்போது இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யபட்டு இருந்தது. தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாகவும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவரது மனைவி உட்பட மூவர் மீது ரூ.44.56 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவு செய்யபப்ட்டு இருந்தது.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யத நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மனுக்களை விசாரணைக்கு எடுத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications