ஹைதராபாத், பெங்களூர் அளவிற்கு தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் வளரவில்லையா.. பிடிஆர் சொன்னது என்ன?
சென்னை: ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் நாம் தான் முதலிடத்தில் இருந்தோம்.. ஆனால் இப்போது ஐதராபாத், பெங்களூரு அளவுக்கு நாம் இல்லை என்றே கூற வேண்டும் என்று தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் முதலாம் ஆண்டு நாள் விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடந்தது. இந்த விழாவில், கருத்துரையாடல் நிகழ்வுகள் நடந்தது. இதில் தொழில் முனைவோர், கல்வியாளர்கள், தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்காக கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள், மாணவத் தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உறுதி எடுத்து அதற்காக 50 உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், புது முயற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, உலகத்திலே முதல் இடத்தில் திறன் வளர்க்கும் மையமாகத் தமிழ்நாடு இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பொருத்தவரை தமிழகத்தின் வளா்ச்சிக்கேற்ப அதன் கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ் மொழியில், 'ஏஐ’ உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால் தமிழா்களுக்கு அது, பெரிதளவில் உதவியாக இருக்கும். அதேசமயம், தமிழகத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், அதை உருவாக்க சுமாா் ஒரு டிரில்லியன் டாலா் மதிப்பில் முதலீடு தேவையாகும். இதுபோன்ற பல்வேறு தொழில்நுட்பம் சாா்ந்த சிக்கல்களுக்கு தீா்வு காண தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இன்றைய நிகழ்வில் திறன் மேம்பாட்டிற்காக 50 உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொலை நோக்குப் பார்வையுடன் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்து ஊக்குவிக்கும் வகையில், புதிய முயற்சிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. ஏஐ கொள்கை மூலம், தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப சார்ந்த நிறுவனங்கள் நிச்சயம் ஈர்க்கப்படும்.
விரைவில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட போகிறது.
கடந்த ஆண்டு 40 லட்சம் சதுர அடியில் புதிய ஐடி பார்க் அலுவலகம் குத்தகைக்கு எடுக்கப்படும் என்று கூறியிருந்தேன். ஆனால் சென்ற ஆண்டு 110 லட்சம் சதுரஅடி புதிய அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு அதில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது ஹைதராபாத், பெங்களூர் அளவிற்குக் கூட தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் வளரவில்லை. ஏனெனில், சட்டமன்றத்தில் கூறியது போல் ஐடி துறைக்கு நாம் ஆண்டுக்கு 100 முதல் ரூ.120 கோடி மட்டுமே ஒதுக்குகிறோம். ஆனால், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் 700 முதல் ரூ.1000 கோடி வரை ஒதுக்குகிறார்கள். இதனால் தான் ஹைதராபாத், பெங்களூரு தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பலதுறைகள் முன்னேற்றம் அடைய வேண்டும் எனப் பார்த்து கொண்டிருப்பதால், தகவல் தொழில்நுட்பத்தை நாம் பெரிதாகப் பார்க்கவில்லை. அதைத் திருத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை படிப்படியாகக் கொண்டு வருகிறோம். தகவல் தொழில்நுட்ப துறையை பொருத்தவரை கடந்த ஆண்டு என்னால் முடிந்த முன்னேற்றங்களை கொடுத்தேன். இன்னும் சிறப்பாக என் துறையை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன்” இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications