பேருந்து தானே வேண்டும்... ஒரு நிமிஷம் பொறுங்க... ராஜேந்திரபாலாஜி கலகல
Recommended Video
சென்னை: நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம், பெண் ஒருவர் தங்கள் ஊருக்கு பேருந்து வசதி கேட்ட நிலையில், நேராக போக்குவரத்துதுறை அமைச்சருக்கு போன் போட்டு கொடுத்துள்ளார் அவர்.
நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களிடம் அந்தப் பகுதி மக்கள் பல புகார்களை கூறிவருகின்றனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரிடம் அவர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ள பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர். அவர்களும் அதை வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட தெற்கு காடுவெட்டி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அப்போது தங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லை என்றும், இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும் முறையிட்டார். இதைக்கேட்டுவிட்டு இப்ப உங்களுக்கு பஸ்ஸு தானே வேணும், ஒரு நிமிஷம் இருங்க, ஏற்பாடு செஞ்சிடலாம் எனக் கூறி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போன் அடித்துள்ளார்.
போனில் விஷயத்தைக் கூறிய ராஜேந்திரபாலாஜி, இருங்க ஊர்க்காரங்க உங்ககிட்ட பேசனுமா எனச் சொல்லி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தெற்கு காடுவெட்டி கிராமமக்களிடம் கோர்த்துவிட்டார். அவர்கள போனை வாங்கி, போதும் போதும் என்கிற அளவுக்கு புகார்களை தெரிவித்தனர். சரி ஏற்பாடு செய்வோம் என நாசூக்காக பதிலளித்து விஜயபாஸ்கர் கழன்றுகொண்டார்.
போக்குவரத்துறை அமைச்சரே ஏற்பாடு செய்துவிடலாம்னு சொல்லிட்டார் அப்புறமென்ன உங்களுக்கு கவலை என அந்த இடத்தை கலகலப்பாக்கினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட தெற்குகாடுவெட்டி கிராமமக்கள்.












Click it and Unblock the Notifications