அதிமுகவினர் திமுகவுக்கு வாங்க.. பகிரங்க அழைப்பு விடுத்த அமைச்சர்.. ஆட்டத்தை மாற்றிய விக்கிரவாண்டி!
சென்னை: அதிமுகவினர் திமுகவில் இணையுமாறும், முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் நிச்சயம் அரவணைப்பார் என்றும் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரகுபதி, "நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பு அதிமுக ஆபத்தான சூழலை சந்திக்கப் போகிறது என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த நிர்வாகிகளே அவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். அதே போன்று, டெல்டா மாவட்ட நிர்வாகிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதிமுக தொண்டர்கள் நம்பி திமுகவிற்கு வரவேண்டும். நாங்கள் அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். உண்மையான அதிமுக தொண்டர்கள் வந்தால் திமுக இரண்டு மடங்கு வலிமையாகிவிடும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக தொண்டர்களை அரவணைத்து நன்றாக வழிநடத்துவார். எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
உண்மையான அதிமுக தொண்டர்கள் திமுகவிற்கு வாருங்கள் என அழைக்கிறேன். எங்களிடம் வாருங்கள், இன்னும் வலிமையாக மாறுவோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகள் புறக்கணித்திருந்தாலும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாங்கள் கண்டிப்பாக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போகிறோம். ஆக, அந்த வாக்குகள் யாருக்கு விழுந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை "நான் ஒரு வேதாளம், பேயை ஓட்டுவது எனது கடமை" என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, "அது வேதாளத்திற்கும் பேய்க்கும் உள்ள விவகாரம் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நாங்கள் மனிதர்கள்" என சிரித்தபடி தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், அதிர்ச்சி தரும் வகையில் விக்கிரவாண்டியில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட அதிக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் மூலம் அதிமுக தொண்டர்களும் வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி அதிமுக தொண்டர்களின் வாக்குகள் யார் பக்கம் சென்றன என்பது வரும் 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்து உள்ளார் சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான ரகுபதி.












Click it and Unblock the Notifications