உடனே வந்த முதல்வர் ஸ்டாலினின் போன் கால்.. பொன்முடி வீட்டுக்கு சென்ற அமைச்சர் ரகுபதி.. இதான் மேட்டரா?
சென்னை: சென்னை ஐகோர்ட், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பை வாசித்ததும், இருவரும், சைதாப்பேட்டையில் உள்ள வீட்டிற்குச் சென்றனர். பின்னர் அமைச்சர் ரகுபதி, அங்கு சென்று பொன்முடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதே சமயம் இந்த தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார். மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்வதற்கு அவகாசம் கொடுக்கும் வகையில் தண்டனையை 30 நாள் நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்ணீர் விட்ட பொன்முடி மனைவி: முன்னதாக, தங்கள் வயது மற்றும் மருத்துவ அறிக்கைகளை காரணம் காட்டி தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டும் என பொன்முடி கோரிக்கை வைத்தார். இதையடுத்தே, 3 ஆண்டுகள் சிறை, தலா 50 லட்சம் அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை என தீர்ப்பளித்தார் நீதிபதி. நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வாசித்து முடித்ததும், பொன்முடியின் மனைவி விசாலாட்சி, நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டார்.
தண்டனை 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவரும், சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குப் பின்புறம் உள்ள தங்கள் வீட்டுக்குச் சென்றனர். கோர்ட்டில் இருந்து வழக்கறிஞர்கள் சூழ வந்த பொன்முடி மிகவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அங்கிருந்து காரில் கிளம்பி தனது வீட்டுக்குச் சென்றார்.
பொன்முடி வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ரகுபதி: இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி இல்லத்தில் திமுக சட்டமன்ற உறுதிப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் குவிந்தனர். பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் அங்கு திரண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி இல்லத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்றார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் சார்பில் நடைபெற்ற ஆட்சிமொழி சட்ட வாரவிழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று பங்கேற்றிருந்தார். அப்போதுதான் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலினின் மெசேஜ்: பின்னர், அமைச்சர் ரகுபதி, பொன்முடி வீட்டுக்குச் சென்றார். பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து சட்டரீதியாக என்ன செய்யலாம் என்பது குறித்து பேசுவதற்காக அமைச்சர் ரகுபதி சென்றதாக கூறப்படுகிறது. பொன்முடி மேல்முறையீடு செய்வதற்கான சட்ட ஆலோசனை குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று காலை தூத்துக்குடி சென்ற நிலையில், அதற்கு முன்னதாகவே, அமைச்சரவை இலாகா மாற்றம் தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் தயார் செய்து கையெழுத்திட்டுச் சென்றதாகவும், தண்டனை அறிவிக்கப்பட்டதுமே அந்தக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.
அதோடு, பொன்முடி தண்டனை விவரம் வந்த பிறகு அதுபற்றி, அமைச்சர் ரகுபதியிடம் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொன்முடியை சந்தித்துப் பேச அறிவுறுத்தியதாகவும் திமுக வட்டார தகவல் தெரிவிக்கின்றன. அதன்படியே, ரகுபதி, பொன்முடியின் வீட்டுக்குச் சென்று அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications