சினிமாதுறையில் பிரச்சினையே வராது! ஏன்னா.. இது அமைச்சர் உதயநிதியின் துறை! அமைச்சர் சாமிநாதன் பளிச்!
சென்னை : சினிமா துறையில் இருந்து அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை இருப்பதால் எனக்கு மிகவும் சிரமமாக இருக்காது. தயாரிப்பாளர்கள் சொல்லும் கோரிக்கைகள் எனக்கு கஷ்டமாக இருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் சாமிநாதன் பேசியிருக்கிறார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 25 வருடத்திற்கு மேலாக உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவானது சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, கலைஞானம், ஆர் கே சுரேஷ் , ஆர் பி சவுத்ரி, தேனாண்டாள் முரளி, நடிகர் ராதாரவி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர் சாமிநாதன்
நிகழ்ச்சியில் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்," தமிழ் திரைப்படங்களில் ஏறத்தாழ 25 வருடத்திற்கும் மேலாக பயணித்ததெல்லாம் எல்லாம் பெரிய சாதனை தான். இந்த துறையில் முதல்வர் என்னை பணி அமர்த்திய போது, என்னிடம் சினிமா தயாரிப்பாளர்கள் பற்றி நிறைய சொல்லுவார். உங்கள் குறைகளை கேட்க நான் இருக்கிறேன். நான் ஒரு விவசாயக் குடும்பத்தை சார்ந்தவன். அந்த கஷ்டத்தை போலதான் சினிமாவும். அந்த கஷ்டத்தை நான் உணர்கிறேன். ஏற்கனவே தொழில் மிகவும் பின் தங்கி இருக்கின்ற நிலையில், கொரோனா பெரிய இடராக இருந்தது.கொரோனாவில் மிகவும் பின் தங்கிய தொழில்களில் சினிமா முக்கியமான ஒன்று.

சினிமா துறை
சங்கத்தில் நிதி இல்லை என்று சொன்னார்கள். கலைஞர் அவர்களின் வழிகாட்டுதல் படி நடக்கும் இந்த அரசு நிச்சயம் உதவி செய்யும். சினிமா துறையில் இருந்து அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும், உதயநிதி ஸ்டாலின் துணை இருப்பதால் எனக்கு மிகவும் சிரமமாக இருக்காது. நீங்கள் சொல்லும் கோரிக்கைகள் எனக்கு கஷ்டமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் உதயநிதி இந்த துறை என்பதால் சிரமம் குறையும்.

நிலுவையில் உள்ள விருது
2016 முதல் 2021 வரை நிலுவையில் உள்ள சிறந்த கலைஞர்களுக்கான நிலுவையில் உள்ள விருதுகளை நிச்சயம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தயாரிப்பாளர்கள் தரப்பில் குறைபாடுகள் ஏதுமில்லை. நடிப்பிலோ அல்லது கதையிலோ ஏதேனும் குறை இருக்கலாம்.அதை நிச்சயம் சரி செய்து தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெற்றி கொடி நாட்டுவதற்காக என்ன வழிமுறைகள் என்று சொன்னால், அரசு தரப்பில் இருந்து செய்ய முடியும் அனைத்தையும் நான் செய்வேன்" என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்கம்
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்த கோரிக்கைகள் முதலமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சிறப்புக் காட்சிக்கு அனுமதிப்பது தொடர்பாக முன்னணி நடிகர்கள் தரப்பில் இருந்து யாரும் இதுவரை கோரிக்கைகள் வைக்காததால் அதை பற்றி இன்னும் அறிவிப்பு ஏதும் இல்லை. மேலும் அப்படி கோரிக்கை வைப்பின் நிச்சயம் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும்.

அதிக கட்டணம்
காரணம் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதற்காக நிச்சயம் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும். டிக்கெட் விலையை குறைப்பது தொடர்பாக கேட்டதற்கு ஆன்லைன் பதிவுகளில் ஏற்படுத்தக்கூடிய செயல்முறை மற்ற மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டு வெற்றி கண்டப்பிறகு பரிசோதனை செய்யப்பட்டு நடைமுறை செய்யப்படும். திரையரங்கு விநியோகஸ்தர்கள் அதிக லாபம் கேட்பது தொடர்பாகவும் இதன் காரணமாக அவதார் திரைப்படம் அதிகமாக வெளியாகவில்லை. இது தொடர்பாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. அப்படி புகார்கள் அளிக்கப்பட்டால் நிச்சயம் இரு தரப்பையும் அழைத்து பேசப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications