ஸ்ரீரங்கம் கோயில் சம்பவத்திற்கு.. அரசியல் சாயம்! அண்ணாமலை விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
சென்னை: திருச்சி ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சுமார் 2500 முதல் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படும் ஸ்ரீரங்கநாதர் கோயில் தென்னிந்தியாவின் அடையாளங்களில் முதன்மையானதாக இருக்கிறது. இது 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோயிலில் கொண்டாடப்பட இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஆந்திர மாநில பக்தர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே திடீரென சண்டை வெடித்தது.

அதாவது பெருமாளை தரிசிப்பதற்காக மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள காயத்ரி மண்டபத்தில் நீண்ட நேரமாக ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் காத்திருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர்கள், அருகில் இருந்த உண்டியலை தட்டி சத்தம்போட்டிருக்கின்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை கண்டிக்க, வாக்குவாதம் பெரியதாகியிருக்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில் இது மோதலாக வெடித்திருக்கிறது.
ஆந்திர ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர் காயத்ரி மண்டபத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரிடம் பேசி வெளியே அழைத்து வந்தனர். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கோயில் பாதுகாவலர்கள் 3 பேர் மீது சென்னா ராவ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பாதுகாவலர்கள் பரத், செல்வகுமார், விக்னேஷ் ஆகியோர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. கோயில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என கடும் விமர்சனம் தெரிவித்திருக்கிறார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
"ஸ்ரீரங்கம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. நேற்றே பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டப்பட்டுவிட்டது. சந்தர்ப்ப சூழல் காரணமாக நடக்கும் பிரச்சனைகளுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் சாயம் பூசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதா? மழை பாதிப்பை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தார் அது நடக்கவில்லை என்பதால் தற்போது ஸ்ரீரங்கம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications