“அமைதி பூங்காவான தமிழகத்தில்..ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்” அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
சென்னை: சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், "தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்" என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கண்டனம் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், "சனாதனம் குறித்த அவதூறு கருத்துக்களுக்கு மத்திய அமைச்சர் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதேபோல இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மறுபுறம் "இந்து சமய அறநிலைய துறை அமைச்சராக இருந்துக்கொண்டு சனாதன ஒழிப்பு மாநாட்டில் சேகர்பாபு எப்படி பங்கேற்கலாம்? அவர் பதவி விலக வேண்டும்" என்று பாஜக வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது.
இப்படி இருக்கையில், "தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். "அமைதி பூங்காவான தமிழகத்தில், ஆன்மீகத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பசி என்னும் நெருப்பை அணைப்பதை வாழ்நாள் நோக்காக கொண்டவர் வள்ளலார். அக்டோபர் மாதம் 5ம் தேதி நடைபெறும் வள்ளலார் விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications