பழைய அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களை வெளியேற்றும் எண்ணம் இல்லை.. அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
சென்னை: கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ள யாரையும் வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அர்ச்சகர்கள் நியமனத்தில் எந்த சட்டவிதிமீறலும் இல்லை என்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் பணியின் போது இறந்தவர்களின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஓய்வூதியம் கிடைக்காமல் அல்லல்பட்டிருந்த குடும்பங்களுக்கு கடந்த 14 ஆம் தேதி ஓய்வூதியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

திருக்கோயில்
அதில் 58 பேர் திருக்கோயிலிலே அர்ச்சகர் நிலை 2 இல் காலியாக இருந்த பணியிடங்களுக்கு ஆகம விதிகளின் படி முறையாக தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் எந்த கோயிலில் அர்ச்சகர் 2ஆம் நிலை பணிக்கு அமர்த்தப்பட்டனரோ அந்த கோயில்களில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

அர்ச்சகர் ஆகலாம்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் குறித்து யாரும் முன்னுக்கு வரக் கூடாது என எண்ணும் சில விஷமிகள் தவறான கருத்தை கூறிவருகிறார்கள். இந்து அறநிலையத் துறை சார்பில் 60 வயதை கடந்து பணிமூப்பும் பெற்றவர்களும் 72, 75 வயதான நிலையிலும் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

கோயில்கள்
அவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் அந்த கோயில்களில் உள்ள உப கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இளைஞர்கள் இறை நம்பிக்கையோடு அடுத்த தலைமுறையினரை ஆன்மீக வழிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் 35 வயதுக்குள்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் படித்து ஆகம விதிகளை முழுவதுமாக கற்று தேர்ந்தவர்களை 58 பேரை நியமித்துள்ளோம்.

தொலைநோக்கு பார்வை
முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையே அடுத்த தலைமுறைக்கு இந்த மக்களை அழைத்து செல்ல வேண்டும் . அடுத்த தலைமுறையினரின் கட்டமைப்பு மிக உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கெனவே கோயில்களில் உள்ள பட்டாச்சாரியார்களையோ அர்ச்சகர்களையோ வெளியேற்றும் எண்ணம் இல்லை.
Recommended Video

பணியாற்றும் இடம்
வயது மூப்பு இருந்தாலும் ஏற்கெனவே பணியாற்றி வரும் இடத்தில் தொடர்ந்து பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது ஒருவராவது எங்களை பணியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என புகார் அளித்துள்ளார்களா. இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசு போல் சித்தரிக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
கடந்த 3 மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்ததை அனைவரும் அறிவீர்கள். இந்துத்துவாவை கையில் எடுப்பவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்பதற்காக அர்ச்சகர்கள் நியமன பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள். வெளிப்படைத்தன்மையோடு இந்து சமய அறநிலையத் துறை பீடு நடைபோடும். எந்த தவறுக்கும் இடம் தராது, ஏற்கெனவே வயது மூப்பில் பணியாற்றும் 70, 75 வயதானவர்களுக்கு அந்த கோயிலில் உரிய பணி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஸ்டாலின் புரட்சி
14 ஆம் தேதி பெரிய புரட்சியை ஸ்டாலின் செய்துள்ளார். மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் சுஹாஞ்சனா என்ற பெண்ணை ஓதுவாராக பணியமர்த்தியுள்ளோம். தமிழகத்திலேயே முதல்முறையாக ஒரு பெண்ணை ஓதுவாராக பணியமர்த்திய பெருமை முதல்வரை சாரும். அந்த பெண் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை முறைப்படி கற்றவர். அவர் பாடுவதை கேட்டால் உருகாத மனமும் உருகும் அளவுக்கு நேர்த்தியாக பாடுகிறார். இந்த 58 பேர் நியமனத்தால் எங்காவது யாராவது பணியை இழந்திருந்தால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவர்களுக்கு மாற்று பணி உடனேயே வழங்கப்படும் என்றார் சேகர் பாபு.












Click it and Unblock the Notifications