இறைவன் சொத்து இறைவனுக்கே... 2 நாட்களில் குயின்ஸ்லேண்ட் நிலம் மீட்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு
சென்னை: இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குயின்ஸ்லேண்ட் நிலம் இன்னும் 2 நாட்களில் மீட்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இறைவன் சொத்து இறைவனுக்கே என்றும் கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இருந்து அரசு ஒரு போதும் பின்வாங்காது எனவும் அவர் உறுதியளித்தார்.
திமுக அரசை பொறுத்தவரை நெருங்க முடியாத இடம் என்று ஒன்றுமே கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

குத்தகை நிலம்
சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் என்ற பொழுதுப்போக்கு பூங்கா இயங்கி வருகிறது. நீர்ச்சறுக்கு, ராட்சத ராட்டினம், நீச்சல் குளம் என கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்குள் நுழைய நுழைவுக்கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.400 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வேணுகோபால் சுவாமி கோயிலுக்கு சொந்தமான இந்த 21 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோயில் நிலம்
குத்தகை காலம் முடிவுற்ற பின்னரும் நிலத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அதில் புதிது புதிதாக கட்டமைப்புகளை உருவாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நீண்ட நாட்களாக இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குயின்ஸ்லேண்ட் தரப்பு மனுவை நிராகரித்த நீதிமன்றம், கோயில் நிலத்தை மீட்குமாறு இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

குறுக்கீடுகள்
ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணியில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வரும் சூழலில், குயின்ஸ்லேண்ட் நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதன் உரிமையாளர் தேசியக் கட்சி ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருப்பதால் அவர் மூலம் சில குறுக்கீடுகள் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Recommended Video

இறைவன் சொத்து
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, குயின்ஸ்லேண்ட் நிலம் மீட்கப்படுவது உறுதி அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இறைவன் சொத்து இறைவனுக்கே என்பதில் இந்து சமய அறநிலையத்துறை உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் சேகர்பாபு கூறுவதை வைத்து பார்த்தால், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கை இன்னும் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

கலக்கம்
இதனிடையே காலம் காலமாக கோயில் சொத்தை ஆக்கிரமித்து வயிறு வளர்த்து வந்த சிலர், அமைச்சர் சேகர்பாபு காட்டும் வேகத்தை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் நீதிமன்றம் மூலம் தடை பெறுவது குறித்த நடவடிக்கையில் ஆக்கிரமிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications