பொற்கால ஆட்சி நடக்குது, மின்வெட்டு இல்லை! இனியும் வராது! மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
சென்னை : தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை எனவும் இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது என தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் பகல் நேரங்களில் மிகக் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது, ஆறுதல் அளிக்கும் வகையில் சில நாட்களாக மழையும் பெய்கிறது.
இரவு நேரங்களில் பலத்த காற்று வீசுவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மின்வெட்டு அபாயம்
இந்த நிலையில் தற்போது தமிழக சட்டசபையில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கையில் விபத்தின்போது கோடைகால மின்வெட்டு தொடர்பாக திமுக மற்றும் பாமக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் போது பேசிய தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் விவசாயிகள் மோட்டார் பழுது ஏற்படுவதாகவும் எனவே வருங்காலத்தில் மின்வெட்டு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, " திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவையை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது தமிழ்நாட்டுக்கு தினசரி 17 ஆயிரத்து 596 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

மின்வெட்டு பற்றாக்குறை
கோடை காலத்தில் தினசரி 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது ஏப்ரல் மாதத்திற்கு கூடுதலாக 3 ஆயிரத்து47 மெகாவாட் மின்சாரமும், மே மாதத்திற்கு 3007 மெகாவாட் மின்சாரத்தையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறையை போக்க 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டதை தொடர்ந்து, ஓரிரு நாள்களில் அந்த நிலக்கரி வந்துவிடும்.

மின்வெட்டு தற்போது இல்லை
தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் மின் பற்றாக்குறை 2,500 மெகாவாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆகையால், தேவையை பூர்த்தி செய்ய 3,000 மெகாவாட் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு சீராக உள்ளது. முதல்வரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு தற்போது இல்லை. இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications