பரபரப்பான சூழலில் உட்கட்சி பஞ்சாயத்து! நெல்லை புறப்படும் தங்கம் தென்னரசு! எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே இருக்கின்ற தலைவலி போதாதென்று நெல்லையிலிருந்து புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பியிருப்பதால், அது குறித்து விசாரணை நடத்த ஸ்பாட்டுக்கே செல்லவுள்ளார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு.
நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அமளியில் ஈடுபடுவது அங்கு தொடர் கதையாக இருந்து வருகிறது. நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப்புக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

ஆரம்பத்தில் அப்துல் வஹாப்பின் ஆதரவாளராக அறியப்பட்ட மேயர் சரவணன் ஒரு கட்டத்தில் தனித்து செயல்படத் தொடங்கியதோடு சில முடிவுகளை தன்னிச்சையாகவும் எடுக்கத் தொடங்கினார். இதனால் மாவட்டச் செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக மேயரை மாற்றக்கோரி தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே அண்மையில் வெளியான நெல்லை மேயரின் ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் மேயர் சரவணனுக்கு எதிரான புகார்கள் தலைமைக்கு பறந்தன. இந்தச் சூழலில் மேயர் சரவணனிடம் விசாரணை நடத்திய கட்சித் தலைமை, அவர் மீது புகார் கொடுத்தவர்களிடமும் விசாரணை நடத்த அமைச்சர் தங்கம் தென்னரசை நெல்லைக்கு அனுப்பி வைக்கிறது.
நாளை நெல்லைக்கு பஞ்சாயத்திற்கு செல்லும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, கம்ப்ளைண்ட் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்துகிறார். அதன் பிறகு தான் யார் மீது என்னென்ன தவறு புகார்களின் உண்மைத் தன்மை குறித்தெல்லாம் தெரியவரும்.
தங்கம் தென்னரசுவின் விசாரணையும், விசாரணை அறிக்கையும் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு நெல்லை மாநகர திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications