டாவோஸ் உலக பொருளாதார மாநாடு.. தமிழ்நாடு செய்த தொழில் முயற்சிகள்.. பட்டியலிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா!
சென்னை: டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழ்நாடு பிரதிநிதிகள் மேற்கொண்ட தொழில் முயற்சிகளை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பட்டியலிட்டுள்ளார். டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளதாக கூறியுள்ள அவர், உணவு ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து ஐக்கிய அரபு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான மாநாடு நடைபெற்றது. இதில் சர்வதேச அளவிலான வணிக நிறுவனங்கள், அந்த நிறுவனங்களின் தலைவர்கள், அரசு துறையைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் தமிழ்நாடு அரசு ஈர்த்த முதலீடுகள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து தமிழக அரசியல் கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 2025ஆம் ஆண்டு மாநாட்டில் திமுக அரசு சாதித்தது என்ன? இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதில் அளித்துள்ளார்.
அதில், இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறியாமல் அற்பத்தனமாக அறிக்கை விடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ கிண்டித் தருவதை ஆளுநரும், எடப்பாடி பழனிசாமியும் மென்று கொண்டிருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது. அங்கு சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர். அதேபோல் செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு குறித்து சிங்கப்பூர் துணை பிரதமருடன் கலந்துரையாடியுள்ளோம்.
மருத்துவ தொழில்நுட்பம், மருந்து, உணவு ஏற்றுமதி பற்றி சிங்கப்பூர் துணை பிரதமருடன் விவாதித்து சாதகமான பதிலையும் தமிழ்நாடு பெற்றுள்ளது. உணவு ஏற்றுமதி, தொழில்நுட்ப துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து ஐக்கிய அரபு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications