வலுக்கும் எதிர்ப்பு: திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
சென்னை: திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம்.

மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம். சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்தது. F.L.12 என்ற லைசன்ஸுக்கான கட்டணம் அரசிதழில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாமக தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும்.
தமிழ்நாட்டின் மதுக் கொள்கையின்படி குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அனுமதிக்கக் கூடாது; பள்ளிகள் மற்றும் கோயில்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது. ஆனால், தமிழக அரசு அளித்துள்ள புதிய அனுமதிகளின் அடிப்படையில் இந்த விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும்.
தமிழ்நாட்டை ஒரு சொட்டு மதுகூட இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். எனவே திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் அரசாணை திரும்பப் பெறப்படும் வரை மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது போல் சமூகவலைதளங்களில் மக்களை தேடி மது திட்டம் என இந்த புதிய சட்டம் குறித்து கிண்டல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதியில்லை.
சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது என தனது பேட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications