வேலையைக் காட்டிய டிட்வா.. வேதனையில் விவசாயிகள்! ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் அறிவித்த அரசு!
சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் எனவும், தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 582 கால்நடைகள் இறந்துள்ளன என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இன்னும் கரையை கடக்காமல் சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளது. தற்போது அந்த புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
போதிய அளவு மழை கொடுக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை அருகே நிலை கொண்டு இருப்பதால் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் புயல் உருவானதிலிருந்து தற்போது வரை டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

டிட்வா புயல்
இந்த நிலையில் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," டிட்வா புயல் சென்னைக்கு அருகில் தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்துள்ளது.
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
நாளை காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது, அப்போது இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே நிலையில் தமிழ்நாட்டின் மகாபலிபுரம் உள்ளே வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நாளை காலை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக எண்ணூரில் 26 செ.மீ, பாரிமுனை 25 செ.மீ, மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதியில் 20 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. நாளை கரையை கடக்கும் போது, அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். டிட்வா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிப்புகள்படி நடைபெறவில்லை.
வானிலை மையம்
டிட்வா புயலானது ஆந்திரா நோக்கிச் செல்லும் என வானிலை மையம் கூறிய நிலையில், சென்னைக்கு அருகிலேயே நிலை கொண்டுள்ளது. இது புயலாக இல்லாமல் இருப்பதால் பாதிப்பு குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இதுவரை 54 நிவாரண முகாம்களில் 3,534 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 582 கால்நடைகள் இறந்துள்ளன. சென்னையில் முன்னெச்சரிக்கையாக 11 குழுக்கள் 330 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையால் 85,500 ஹெக்டர் வரை பாதிப்பு இருக்கலாம் என கணக்கு உள்ளது. இந்த மழை முடிந்த பிறகு கணக்கு எடுத்து நிவாரணம் வழங்கப்படும். தற்போது டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்தில் அதற்கான இழப்பீடு குறித்து அறிவிக்கப்படும். மயிலாடுதுறை மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
அதே போல் தூத்துக்குடி, தஞ்சாவூரில் தலா ஒருவர் என இருவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர். ஏரிகள் தூர்வாரவில்லை என எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக குற்றச்சாட்டுகளை கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மழைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார். முதலமைச்சர் மனிதாபிமான அடிப்படையில், இலங்கையில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவினார். அதனை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி இலங்கைக்கு உதவினார். தமிழ்நாட்டிற்கு உதவவில்லை என கூறுவது அவர் பதவிக்கு அழகல்ல" என்றார்.


Click it and Unblock the Notifications
