ரூ.245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டிற்கு... அ.தி.மு.க. அரசு ரூ.600 கொடுத்தது ஏன்? - மு.க.ஸ்டாலின்
சென்னை: ரூ.245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டிற்கு, அ.தி.மு.க. அரசு 600 ரூபாய் கொடுத்தது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஐ.சி.எம்.ஆர். அங்கீகாரம் பெறாத ஒரு இடைத்தரகு நிறுவனத்திடம் அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆர்டர் வழங்க முதலமைச்சர் எப்படி அனுமதித்தார் என அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நீதிமன்ற தீர்ப்பு
தமிழக மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு நடத்தும் வகையில் - கொரோனா சோதனை செய்யும் அதிவிரைவு பரிசோதனை கருவிகளை (Rapid Test Kit) அதிக விலைக்கு வாங்கியுள்ள அ.தி.மு.க அரசின் முகமூடியைக் கிழித்தெறியும் வகையில், "இனிமேல் கொரோனா நோய் பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட் 600 ரூபாய்க்குப் பதிலாக ஜி.எஸ்.டி. உட்பட 400 ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்பட வேண்டும்" என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித நேயம் மிக்க தீர்ப்பினை இதயபூர்வமாக வரவேற்கிறேன்.

வக்காலத்து
"நாங்கள் ஐ.சி.எம்.ஆர் நிர்ணயித்துள்ள விலையில்தான் வாங்கியிருக்கிறோம்" என்று அ.தி.மு.க. அரசு கூறியது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் திரு. உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஸும், சுகாதாரத்துறை அமைச்சருடன் அமர்ந்து இந்த விலைக்கு வாங்கியதற்கு "வக்காலத்து" வாங்கி பேட்டியளித்து - தனியாருக்குக் கொள்ளை லாபம் போவதை நியாயப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

நீதிமன்றத்தில் தகவல்
ஆனால் "இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டை தயாரிக்கும் சீன நிறுவனம் ஒரு கிட்டை 225 ரூபாய்க்கு மட்டுமே விற்கிறது. அந்த கிட் இறக்குமதி செய்வதற்கு ஆகும் சரக்கு கட்டணம் 20 ரூபாய். ஆக மொத்தம் ஒரு கிட் விலை 245 ரூபாய்" என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்த்தால் - 245 ரூபாய் மதிப்புள்ள ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டிற்கு, முதலமைச்சர் திரு.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு 600 ரூபாய் கொடுத்திருக்கிறது என்ற தூசு படிந்த உண்மை அம்பலமாகியிருக்கிறது.

மிகப்பெரிய விலை
கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, "வானளாவிய" விலை கொடுத்து வாங்கியதற்கு இப்போது அ.தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? அதுமட்டுமின்றி, இந்த மருத்துவ உபகரணங்களை நேரடியாக ஐ.சி.எம்.ஆர். அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடமிருந்து வாங்காமல், ஐ.சி.எம்.ஆர். அங்கீகாரம் செய்யாத சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருப்பதும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வெளிவந்துள்ளது.

கவலையின்றி
ஊரடங்கை அவசரமாக அறிவித்து - மக்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தும் அ.தி.மு.க. அரசு - பேரிடரிலும் இப்படியொரு வெளிப்படைத்தன்மை இல்லாத உள்நோக்கமுள்ள கொள்முதலுக்கு வித்திட்டு - நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையிலும், அதுகுறித்த கவலையின்றி, இப்படி உத்தரவு வழங்கியிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.
இந்த நேரத்தில் இப்படி இக்கட்டான கேள்விகளைக் கேட்கலாமா, இது அரசியல் என்று எளிமையாகச் சொல்லி, கேள்விக் கணைகளைக் கடந்துபோக முயற்சி செய்யக் கூடாது. இது, மக்களின் பொதுச் சொத்தான கருவூலத்தைக் கரையான் அரிக்கும் காரியம் போன்றது!












Click it and Unblock the Notifications