• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மத்திய அரசுக்கு எதிராக ஒரே குரலில் ஸ்டாலின்-ராமதாஸ்.. ஆவேச அறிக்கைகள்.. செம திருப்பம்

|

சென்னை: பண்பாட்டு களஞ்சியமான கோவில்களை பறித்துக் கொள்ள பரம்பரை எதிரிகள் துடிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமைவாய்ந்த கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி தமிழகத்திலுள்ள பல கோயில்களின் பராமரிப்பும் நிர்வாகமும் மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை வெளியிட்ட மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், அதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், முக ஸ்டாலின் இன்று காரசாரமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

கண்டனம்

கண்டனம்

"மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம்" என்று மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோயில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து - பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் "தொல்லியல் துறை"ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது.

திருவண்ணாமலையார் கோவில்

திருவண்ணாமலையார் கோவில்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று - அதற்கு கலைஞரும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக - அத்திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட்டது. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று - அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது. இதுபோன்ற சூழலில், பாஜகவின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும், தமிழைப் புறக்கணித்து இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் "தாலாட்டு"பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து - இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பாஜக அரசு ஈடுபட விரும்புகிறது.

அடாவடியானது

அடாவடியானது

மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது; மத்திய - மாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து - வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி ஆகும். திருக்கோயில்கள் நிர்வாகத்தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பாஜக மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை அதிமுக அரசும் - தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனும் மவுனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பண்பாடு

பண்பாடு

தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக "தாராளமாக" தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு, இப்போது திரைமறைவில் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகமே எழுகிறது. குறிப்பாக "தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன"என்று மத்திய அமைச்சர். பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது - தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு - தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம்.

பரம்பரை எதிரிகள்

பரம்பரை எதிரிகள்

திருக்கோயில்களை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக எம்.பி மூலம் மக்களவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர வைத்த "பரம்பரை எதிரிகள்" தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள். தமிழர்களின் நாகரிகம் - பண்பாடு ஆகியவற்றைச் சிதைக்க இரவு பகலாகத் தூக்கமின்றிச் செயல்படுகிறார்கள். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கிறோம் என்ற ஒரே ஆணவத்தில் நடத்திட நினைக்கும் இந்த கலாச்சாரப் படையெடுப்பை திமுக ஒரு போதும் அனுமதிக்காது. ஆகவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர்

முதல்வர்

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறி - மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை - கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் - அதை எதிர்த்து திமுக சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

முன்னதாக, இன்று காலை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட கோயில்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அப்பட்டமான இந்த கலாச்சார படையெடுப்பை அனுமதிக்க முடியாது. வழிபாட்டில் உள்ள கோயில்களை மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பது என்பது அக்கோயிலை மூடுவதற்கு ஒப்பானதாகும்.

டெல்லி அனுமதி

டெல்லி அனுமதி

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வழிபாடு நடத்த முடியும்; கோயில்களில் திருப்பணி செய்வது என்றாலும், பக்தர்களின் வசதிக்காக ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றாலும் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செய்ய முடியும். ஆனால், கோயில் நிர்வாகம் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது என்றால், அதன்பின் கதவுக்குக் கூடுதலாக ஒரு பூட்டுப் போடுவது என்றால் கூட டெல்லி வரை சென்று அனுமதி வாங்கித் தான் செய்ய முடியும்.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

அதுமட்டுமின்றி, கோயிலுக்குள் பக்தர்கள் சென்று வருவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பக்தர்களின் வருகை கிட்டத்தட்ட முற்றிலுமாக குறைந்துவிடும். இது கோயில்களில் பாரம்பரியத்தையும், புகழையும் சிதைத்துவிடும். இந்து கோயில்களின் பெருமையே அவற்றின் புனிதம் தான். மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றால் கோயில்களின் புனிதம் கெட்டு, அவை சாதாரண கட்டிடங்களாகி விடும்.

உணர்வு

உணர்வு

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை உயிரும், உணர்வும் மிக்க வழிபாட்டு தலங்களாக திகழும் கோயில்கள், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு சென்றவுடன் உயிரும், உணர்வும் அற்ற புராதன சின்னங்களாக மாறிவிடும். இது தடுக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை, தமிழக தொல்லியல் துறை ஆகியவற்றை விட மத்திய தொல்லியல் துறையால் தமிழக ஆலயங்களை சிறப்பாக பராமரிக்க முடியாது. தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம், செஞ்சி தேசிங்கு ராஜன் கோட்டை, திருவண்ணாமலை கந்தாசிரமம் ஆகியவை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற பிறகு அவற்றின் பராமரிப்பு மிகவும் மோசமாகிவிட்டது உண்மை.

பக்தர்கள் வருகை

பக்தர்கள் வருகை

தமிழகத்தில் மீதமுள்ள கோயில்கள் சிறந்த பராமரிப்புடனும், பக்தர்கள் வருகையுடனும் உயிரோட்டமாகத் திகழ வேண்டுமானால் அவை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும். இந்தியாவில் ஏதேனும் கோயில்கள் பெருமையுடனும், புகழுடனும் இருந்தால் அந்தக் கோயில்களை தங்கள் வசமாக்கிக்கொள்வது மத்திய தொல்லியல் துறையின் வாடிக்கையாகி வருகிறது. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தை மத்திய தொல்லியல் துறை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவித்து அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அதனால் அந்தக் கோயிலின் வழக்கமான வழிபாட்டு முறைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாண்டு கால அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்த கோயில் மத்திய தொல்லியல் துறையிடமிருந்து 2005-ம் ஆண்டில் மீட்கப்பட்டு, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தான் அந்தக் கோயிலுக்கு அதன் பழைய பொலிவும், பெருமையும் திரும்பக் கிடைத்தது.

ஒரே குரல்

ஒரே குரல்

கடந்த 2018-ம் ஆண்டில் கூட திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடிவு செய்த மத்திய தொல்லியல் துறை, அதை வலியுறுத்தித் திருப்பதி கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தொல்லியல் துறை அதன் முடிவை திரும்பப் பெற்றது. இப்போது அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள கோயில்களை கையகப்படுத்த தொல்லியல் துறை துடிப்பது நியாயமல்ல. தமிழகத்திலுள்ள கோயில்களை கையகப்படுத்தும் திட்டம் தொல்லியல் துறைக்கு இருந்தால், அதை கைவிட வேண்டும். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தபோதிலும், கடும் வார்த்தைகளால் மத்திய அரசை கண்டிக்க தவறவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினும் அதேபோல கண்டித்துள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK president MK Stalin condemns union government for taking control of Tamilnadu Heritage Temples and places, he warns that the DMK will hold protest against union government.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more