கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுகவில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரங்களில், வாய்க்கு வந்தபடி பேசி சர்ச்சையில் சிக்க கூடாது. மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும் என்று ஸ்டாலின் ஸ்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் தெருங்கி கொண்டிருக்கிறது. பொதுவாக தேர்தலின்போது அரசியல் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிக் கொள்வது வாடிக்கையான ஒன்று. விஜய் த்ரிஷா குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு சொந்த கட்சியினரே எதிரப்பு தெரிவித்தனர். பெண்கள் பாதுகாப்பு குறித்த போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சி.வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர் விஜயபாஸ்கர் பேசிய கருத்துகளும் சர்ச்சையானது. இது தேர்தல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

உஷாரான திமுகவினர்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், திமுகவினர் உஷாராகியுள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியது சர்ச்சையானது. அதிமுக போராட்டங்களை நடத்தி அந்த விவகாரத்தை பெரிதாக்கியது. இது கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
சமீபத்தில் மற்றொரு திமுக எம்பி தயாநிதி மாறன் கோவை மாவட்டம் குறித்து பேசியது சர்ச்சையானது. அதிமுக மற்றும் பாஜகவினர் செல்லுமிடமெல்லாம் இதை கூறி திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஸ்டாலின் உறுதி
ஏற்கனவே பொன்முடி, ராஜ கண்ணப்பன் ஆட்சியில் இருந்தபோது பேசிய கருத்துகளும் சர்ச்சையாகின 2026 தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை திமுகவுக்கு எதிரான பிரச்சாரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு கடுகளவும் வாய்ப்பு வழங்கி விடக்கூடாது என்பதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.
பிரம்மாண்ட கூட்டணி அமைந்தது, அதிமுக, தவெக சீனியர் நிர்வாகிகளை திமுகவில் இணைத்தது ஆகியவை மூலம் திமுக களத்தில் முன்னேறி கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் திமுகவின் தவறுகளுக்காக எதிர்கட்சிகள் காத்திருப்பார்கள். அவற்றுக்கு இடம் கொடுக்க கூடாது என ஸ்டாலின் ஸ்ட்ரிக்டாக உத்தரவு போட்டுள்ளாராம்.
பொதுவெளியில் கவனம்
அமைச்சர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் பொதுவெளியில் பேசும் கருத்துகள் சர்ச்சையானால், அது, தேர்தல் நேரத்தில் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தி வெற்றியை பாதிக்கும் என்று ஸ்டாலின் கருதுகிறாராம். இதனால், எதிர்க்கட்சிகள் உற்று கவனிக்கும் பொன்முடி, ராசா, தயாநிதி மாறன், ஆ.எஸ். பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் என்று நேரடியாகவே ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளாராம்.
திமுக தலைமை அட்வைஸ்
முக்கியமாக தேர்தல் ஆலோசனை கூட்டங்கள், பிரச்சாரங்களின்போது, தனி நபர் விமர்சனங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்ச்சைகளை தவிர்த்து திமுகவின் திட்டங்களை பற்றி மட்டுமே மக்களிடம் பேசி வாக்கு திரட்ட வேண்டும் என்று திமுக தலைமை கூறியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications