ஊழலை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க நான் ரெடி... மிஸ்டர் பழனிசாமி அவர்களே நீங்கள் ரெடியா? -ஸ்டாலின்
சென்னை: ஊழலை பற்றி நேருக்கு நேர் முதலமைச்சருடன் விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடன் ஊழலை பற்றி விவாதிக்க தயாரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு நேற்று கேள்வி எழுப்பிய நிலையில் அவர் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஊழல் கட்சி
இந்தியாவிலேயே ஊழலுக்காகச் சிறைக்குப் போன முதலமைச்சரைக் கொண்ட கட்சி - ஊழலுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, என்றும் மாறாத ஊழல் கறை படிந்த கட்சி அ.தி.மு.க. தான். அந்தக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் தான். அது பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல், 'நான் ஊழலே செய்யவில்லை' என முழுப் பூசணிக்காயை அவர் இலைச் சோற்றில் மறைக்க முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளம்பரங்கள்
அரசு கஜானா பணத்தை அள்ளி விட்டு அதன் மூலம் விளம்பரங்களை வெளியிட்டு இப்படி போலி - பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும், அதிகார தோரணையில் போலீஸ் பாதுகாப்புடன் புளுகுப் பிரச்சாரம் செய்வதற்கும் திரு. பழனிசாமிக்கு இருப்பது இன்னும் நான்கு மாத அவகாசம்தான். அதனால் தான், என்ன பேசுகிறோம்- எத்தகைய பொய் பேசுகிறோம் என்பது தெரியாமல், கேட்போர் அனைவரும் நம்பி விடுவார்கள் என்ற நப்பாசையில், புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப் படுகிறேன்.

பதவிக்குரிய நாகரிகம்
வாய் திறந்தால் பொய் மட்டுமே பேசத் தெரிந்த - உண்மை என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய- முதலமைச்சரைத் தமிழகம் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறது. கொல்லைப்புற வழியாகக் குறுக்கு சந்தில் - அதுவும் 'கூவத்தூர் கொண்டாட்ட ஆடல் பாடல்' கூத்து நிகழ்ச்சி மூலம் முதலமைச்சரான திரு. பழனிசாமிக்கு - ஒரு முதலமைச்சர் பதவிக்குரிய நாகரிகம், கண்ணியம் துளிகூடத் தெரியவில்லை. அதனால்தான் அவருக்கு, குடும்பத்திற்கும்- அரசுக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை.

உறவினர்களுக்கு டெண்டர்
மகனின் சம்பந்திக்கும்- பொது ஊழியருக்கும் வேறுபாடு தெரியவில்லை. தனது துறையிலேயே சம்பந்திக்கு 6000 கோடி ரூபாய் டெண்டர் கொடுத்தார். 'என் உறவினர் டெண்டர் எடுப்பதில் என்ன தவறு?' என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். 'ஆன்லைன் டெண்டரில் என் உறவினர் டெண்டர் போட்டால் எனக்கு எப்படித் தெரியும்?' என்று இப்போது அந்தர் பல்டி அடிக்கிறார்.

விவாதிக்கத் தயாரா?
என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா? என்று முதலமைச்சர் பழனிசாமி நேற்று சவால் - சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்! அதற்கு முன்னர் திரு. பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து- " சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்" என்று பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும்.

இடம் சொல்லுங்கள்
"எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்" என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி- ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள். அடுத்த நிமிடமே- விவாதத்திற்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும்- உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் அழைத்து வாருங்கள்.

தொங்க விடுகிறேன்
ஊழல் பற்றி விவாதிப்போம். அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில்- குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படிக் கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள் - என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள்- என்ன கலெக்ஷன் செய்துள்ளீர்கள்- எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாகத் தொங்க விடுகிறேன். நான் ரெடி- முதலமைச்சர் மிஸ்டர் பழனிசாமி அவர்களே நீங்கள் ரெடியா?.












Click it and Unblock the Notifications