"தமிழ்+ தமிழர்கள்+ அரசு திட்டங்கள்.." ஸ்டாலின் கையில் எடுத்துள்ள ஆயுதம்.. 2026ல் கை கொடுக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கு மேல் இருந்தாலும் கூட இப்போதே அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது. குறிப்பாகத் தமிழர்களின் அடையாளம் ஆபத்தில் இருப்பதாக இப்போதே திமுக தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. தமிழக அரசியல் சூழல் இப்போது எப்படி இருக்கிறது! திமுக என்ன செய்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 1971ஆம் ஆண்டு கோவையில் இந்தி திணிப்புக்கு எதிராக ஒரு மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்தி திணிப்புக்கு எதிராக அங்கு நடந்த மாநாட்டில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞன் தான் தமிழகத்தின் இன்றைய முதல்வர் ஸ்டாலின்.. அன்றைய கூட்டத்தில் ஸ்டாலின் அவர் முக்கியமான ஒரு சபதத்தைச் செய்தார். அன்று பேசிய அவர், "தமிழுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ள மாணவர்களின் பட்டியலில் எனது பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று முழங்கினார்.

MK Stalin DMK politics

ஸ்டாலின்

இன்று முதல்வரான பிறகும் கூட அவர் இந்தி திணிப்பு விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இப்போது 72 வயதாகும் ஸ்டாலின், மொழி கொள்கை விவகாரத்தை வைத்தே 2026-ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகி வருவது போல தெரிகிறது. வரும் தேர்தலில் மதுபான ஊழல் புகார் திமுகவுக்கு எதிராகப் பெரிதாக வெடிக்கும் என்று வல்லுநர்கள் கூறும் நிலையில், அதைச் சமாளித்து திமுகவின் வரலாற்றை ஸ்டாலின் மாற்றி எழுதுவாரா என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 1971க்குப் பிறகு, திமுக ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்டபோது தேர்தலில் வென்றதே இல்லை. அதாவது திமுகவால் இரண்டு முறை தொடர்ச்சியாகச் சட்டசபைத் தேர்தல்களில் வெல்ல முடிந்ததே இல்லை. அதேநேரம் அதிமுக எம்ஜிஆர் இருந்தவரைச் சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடையவில்லை. மேலும், 2011 மற்றும் 2016 என அடுத்தடுத்து இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

ஸ்டாலினுக்கு தெரியும்

இந்த நிலையை மாற்றி 2026ல் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் தற்போதைய இலக்காக இருக்கிறது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு எதிராக உள்ள anti-incumbency வாக்குகளே திமுகவுக்கு எதிராகப் போய் உள்ளன. ஆனால், இந்த முறை அது தனது இலக்கை அடையத் தடையாக இருக்கக்கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். அதைச் சமாளித்து மக்களை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதும் ஸ்டாலினுக்குத் தெரியும்.

இதன் காரணமாக இந்தி திணிப்பு முதல் தொகுதி மறுசீரமைப்பு வரை மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் முன்வைக்கிறார். மேலும், மத்திய நிதி தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதாகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறார். இவை எல்லாம் வெறும் அரசியல் பிரச்சினைகள் மட்டுமில்லை.. தமிழ்நாட்டின் பெருமை மற்றும் மொழியியல் சுயாட்சிக்கான அச்சுறுத்தல்கள் என்றும் ஸ்டாலின் கூறுகிறார்.

திமுக

தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் மொழியியல் பாரம்பரியத்தைக் காக்கும் கட்சியாக அவர் திமுகவை முன்னிறுத்துகிறார்.. தமிழில் கற்பிக்கும் உரிமைக்காகப் போராடுவதாக இருந்தாலும் சரி அல்லது தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, திமுக தான் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுகிறது என்ற முழக்கத்தையே ஸ்டாலின் இப்போது கையில் எடுத்துள்ளார்.

கடந்த மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாள் உரையில் என்ன பேசினார் என்பதைக் கவனித்தாலே இது நமக்குப் புலப்படும். மாநிலத்தின் சுயாட்சி, சமூக நீதி மற்றும் மக்கள் நலத்திட்டங்களைப் பாதுகாக்கத் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும், தமிழ் மொழியைப் பாதுகாப்பது மற்றும் தொகுதி மறுசீரமைப்பு எனத் தமிழகம் இப்போது இரு பிரச்சினைகளைச் சந்தித்துள்ளதாகக் கூறினார். மேலும், இது வெறும் அரசியல் போராட்டம் இல்லை.. தமிழ்நாட்டின் உரிமைக்கான போராட்டம் என்றும் அவர் முழங்கினார்.

தொகுதி மறுசீரமைப்பு

இதன் காரணமாகவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் வகையில் ஒரு கூட்டத்தை திமுக நடத்துகிறது. இதில் பல மாநில முதல்வர் உட்பட பல கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பதை திமுக உறுதி செய்துள்ளது. அதேபோல புதிய கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லி அதையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதுவே ஸ்டாலின் இப்போது முன்னெடுத்துள்ள அரசியலாக இருக்கிறது.

பாஜக

பாஜக கடந்த காலங்களில் பல முறை தமிழ்நாட்டில் வளர முயன்றுள்ளது. இருப்பினும், ஒருபோதும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. பாஜக கூட்டணியால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. குறிப்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூட கோவையில் தோல்வியைத் தழுவினார்.

தவெக

ஆனால், இப்போது தமிழக அரசியலில் புதிதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் உள்ளது. திமுக மற்றும் பாஜக என இரண்டையுமே தங்கள் எதிரிகளாக விஜய் கூறியிருக்கிறார். மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரண்டையுமே விஜய் விமர்சித்தே வருகிறார். தமிழ்நாட்டில் விஜய்க்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் வாக்குகளாக மாறுமா என்பதே பெரிய கேள்வி.

அதிமுக

அதேநேரம் அதிமுகவை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவே கூடாது. 2021ல் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே தேர்தலைச் சந்தித்த போதும் அதிமுக 66 இடங்களில் வென்றது. மேலும், சுமார் 33% வாக்குகளையும் பெற்றது. இது சாதாரணமான விஷயம் இல்லை. சரியான கூட்டணியை அமைத்தால் அதிமுக நிச்சயம் ஒரு வலுவான கம்பேக்கை கொடுக்கும்.

திமுகவுக்கு உள்ள சிக்கல்கள்

திமுகவுக்கும் கூட பல்வேறு சிக்கல்கள் உள்ளது. மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சினை தான் திமுகவுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கிறது. மேலும், ஊழல் புகார்களும் சிக்கலாக எழுந்துள்ளது. குறிப்பாக டாஸ்மாக் துறையில் ரூ.1000 கோடிக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது திமுகவின் இமேஜை பாதிப்பதாக இருக்கிறது. மேலும், தமிழக அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ள நிலையில், திமுகவின் நிதி மேலாண்மையும் தேர்தல் காலத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம்.

திமுகவின் திட்டங்கள்

இதைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை திமுக அறிவித்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் கல்வித்துறைக்குப் பெரும்பகுதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசின் நிதி இல்லை என்றாலும் தமிழக அரசு தனது சொந்த நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 மூலம் ஒரே ஆண்டில் மாணவிகளின் சேர்க்கை சுமார் 19% வரை அதிகரித்துள்ளது. அடுத்தகட்டமாக இப்போது மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பட்ஜெட்டில் ஏகப்பட்ட திட்டங்களையும் திமுக அரசு அறிவித்துள்ளது.

கை கொடுக்குமா?

இந்தியா கூட்டணி தேசியளவில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தாலும் பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஒருங்கிணைத்தே பயணித்து வருகிறது. வரும் தேர்தலிலும் திமுக கூட்டணி உடையாமல் பார்த்துக் கொள்ளும் என்றே தெரிகிறது. இந்தச் சூழலில் தான் நாளை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராகவும் கூட்டத்தை நடத்துகிறது திமுக. அது 2026 தேர்தலுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+