மதுரையில் டி.எம்.சவுந்திரராஜன் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின்.. ராமநாதபுரத்திற்கும் பயணம்
சென்னை: முதல்வர் முக ஸ்டாலின் இன்று மதுரைக்கு வந்த நிலையில் மறைந்த பழம்பெரும் பாடகர் டிஎம் சவுந்திரராஜன் சிலையை திறந்து வைத்தார்.
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்திறங்கிய முதல்வர் ஸ்டாலின் காரில் மதுரை முனிச்சாலைக்கு சென்றார்.

அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான கட்டட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்திரராஜனின் உருவச் சிலையை திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், எவ வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவை தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். பிறகு நாளை காலை 10 மணி அளவில் கார் மூலம் ராமநாதபுரம் புறப்படுகிறார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதிக்கு வரும் முதல்வர் ல்டாலின், மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெறும் தென் மண்டல அளவிலான திமுக வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று அங்கு தனியார் விடுதியில் தங்கும் அவர், நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மண்டபம் கலோனியர் பங்களா அருகில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்கிறார்.
முதல்வர் கலந்து கொள்ளும் விழாவுக்காக ராமநாதபுரம் அருகே பேராவூர் கடற்கரை சாலை பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இதே போல் மண்டபம் பகுதியில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டிற்கும் அவர் செல்கிறார்.












Click it and Unblock the Notifications