செல்லாது... செல்லாது... உள்ளாட்சி தேர்தலை மீண்டும் நடத்த கமல்ஹாசன் கோரிக்கை
உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுவாக்குப் பதிவு செய்வதே நியாயமானதாக இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவும், அதிமுகவும் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டதாகவும், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுவாக்குப் பதிவு செய்வதே நியாயமானதாக இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டங்களைப் போல் நகர சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பெரும் 60. 70 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் அனைத்தும் ஜனவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பெரும்பாலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டதால் அந்த இடங்களுக்கு மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் 7 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பணமும் பரிசும் விநியோகம்
இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது, "ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன. அனைத்து வார்டுகளிலும் பணமும் பரிசுப் பொருட்களும் வினியோகம் ஆனது.

மிரட்டப்பட்ட வேட்பாளர்கள்
வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் பணமளித்து வரவழைக்கப்பட்டார்கள். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பிரச்சாரத்திற்குச் செல்கையில் அடித்து விரட்டப்பட்டார்கள். தேர்தல் நாளில் வாக்குச் சாவடியிலே பணம் வினியோகம் செய்யப்பட்டது. உச்சகட்ட அநீதியாக வாக்குச்சாவடிகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அவல நகைச்சுவை
ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இச்செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. தங்கள் வாக்கைப் பதிவு செய்யவந்த மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை.

மறு வாக்குப்பதிவு தேவை
உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிடத் துடிக்கும் கழகங்களின் ஊழல் வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது. தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நகரசபைக் கூட்டம்
தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் இறையன்புவை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, கிராம சபை கூட்டங்களைப் போல் நகர சபை கூட்டங்களை நடத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "50 விழுக்காடு மக்கள் தொகை நகரத்தைச் சுற்றி உள்ளார்கள். கிராம சபைபோல் நகர சபை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

நகர வார்டு சபைகள்
2010ஆம் ஆண்டில் சட்டமியற்றி அரசிதழில் நகர சபை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.எங்களது போராட்டம் அறவழியில்தான் இருக்கும். சரிவரச் செயல்படாத அரசை செயல்படவைக்க வேண்டும் அல்லது அரசை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும். நகர வார்டு சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய சந்திப்பின் சாராம்சம் என்றும் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்












Click it and Unblock the Notifications