உலகத்தையே காப்பாற்றும் இடத்தில் இருக்கிறார் மோடி.. பெரிய அரசியல் மாற்றம் வரப்போகுது.. ஏசி சண்முகம்
சென்னை: நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில், புதிய நீதிக் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் உலகத்தை காப்பாற்றக்கூடிய இடத்தில் மோடி இருக்கிறார். அவருக்கு இணையாக இந்தியாவில் எவரும் இல்லை என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் கூறினார்.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரே மாதம் தான் இருப்பதால் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி அமைப்பது, யார் யாரை வேட்பாளராக நிறுத்துவது எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாக தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்படுகிறது. இதில், கூட்டணி அமைத்து தான் போட்டி என்று கூறியுள்ள தேமுதிக, பாமக, சமக இன்னும் யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒரு பக்கம் பாஜக தங்கள் பக்கம் ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்த, மறுபக்கம் அதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் புதிய நீதிக் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதிக் கட்சி நிறுவனரும் தலைவருமான ஏசி சண்முகம் கூறியதாவது:-
நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் புதிய நீதிக் கட்சி பாஜகவுடன் தான் கூட்டணி அமைத்து போட்டியிடும். பாஜகவின் தாமரை சின்னத்தில் தான் புதிய நீதிக்கட்சி போட்டியிடும். அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் என்று யாரும் இல்லை. எனவே நாளை மோடியை கூட அவர்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்கலாம். இந்தியாவில் மோடிக்கு இணையான தலைவர் எவரும் இல்லை.. உலகத்தை காப்பாற்றக்கூடிய இடத்தில் மோடி இருக்கிறார்.. தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றம் வரப்போகுது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications