தங்கத்தை விடவும் மதிப்பு அதிகம்.. சின்ன பாக்கெட் 6 கோடி.. சென்னை விமான நிலையத்தில் இளம் பெண் கைது
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய இளம் பெண் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் வந்திருந்தார். அவரிடம் தங்கத்தை விடவும் மதிப்புள்ள பொருள் சிக்கியது. சின்ன பாக்கெட் 6 கோடி என்று கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையம் இந்தியாவின் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். உலகின் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து விமானங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரியைச் சேர்ந்த பலர் வெளிநாடுகள் சென்று வர சென்னை சர்வதேச விமான நிலையத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.
இது தவிர கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த பலர் சென்னை வழியாகவே பல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.. இதனால் எப்போதுமே சென்னை விமான நிலையம் பிஸியாக இருக்கும். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கம் போல் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய இளம்பெண் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் வந்திருந்தாக கூறப்படுகிறது. அந்தப் பயணியின் நடவடிக்கையில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள், ஜாம்பியா பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து முழுமையாக பரிசோதித்தார்கள்.
அப்போது பெண்ணின் உள்ளாடைக்குள் ஒரு பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பார்சலில் 460 கிராம் கொக்கைன் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தார்கள், அதன்பின் பெண்ணை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அதில் அவருடைய வயிற்றுக்குள் பெரிய மாத்திரைகளில் அடைத்து போதை பவுடரை விழுங்கி வந்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவக் குழுவினர் வயிற்றுக்குள் இருந்த மாத்திரைகளை (கேப்சுல்ஸ்) ஒவ்வொன்றாக வெளியில் எடுத்தனர். மொத்தம் 12 கேப்சுல்கள் இருந்தன. இவைகளில் 150 கிராம் கொகையின் போதை பொருள் இருந்தது. ஜாம்பியா நாட்டு இளம் பெண்ணிடம் இருந்து, 610 கிராம் கொகையின் போதை பவுடரை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6.1 கோடி என்பது தெரியவந்தது. அவர் யாருக்காக இந்த போதைப்பொருளை கொண்டு வந்தார் என்பதை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில், சென்னையைச் சேர்ந்த இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதித்த போது, பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் 1 கிலோ 816 கிராம் உயர் ரக கஞ்சா போதை பொருளை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.1.9 கோடி ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த வாலிபரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications