பூகம்பமே வந்தாலும் சரி.. முடிஞ்சது முடிஞ்சது தான்.. அமலாக்கத்துறையை அதிரவிட்ட முகுல் ரோத்தகி!
சென்னை: கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது என, அமலாக்கத்துறையின் வாதத்துக்கு பதிலடி கொடுத்தார் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது

ஆதாரமே இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக்கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரி அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை எனவும் குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை கஸ்டடியில் இல்லை: இதையடுத்து அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை எனவும், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை எனவும், ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது எனவும் குறிப்பிட்டார். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இயந்திரத்தனமானது அல்ல: உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார் என்றார்.
செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலிலும், அமலாக்க துறை காவலிலும் வைத்து விசாரிக்க அனுமதித்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இயந்திரத்தனமானதல்ல எனவும், அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் துஷார் மேத்தா வாதிட்டார்.
காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலவில்லை எனவும், முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோராவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும் எனவும் தெரிவித்தார்.
பழிவாங்கும் நோக்கம் இல்லை: கைதின் போது பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும், ஜாமீன் மனு தாக்கல் செய்ததன் மூலம் நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
உணவு இடைவேளைக்கு பின் வாதத்தை தொடர்ந்த துஷார் மேத்தா, ஆரம்பத்தில் இருந்து செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சம்மன் அனுப்பினாலும் பதில் இல்லை. கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது திமுகவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றார்.
தள்ளுபடி செய்ய வேண்டும்: வழக்கில் ஆதாரங்களும், அடிப்படை முகாந்திரமும் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுகள் தெரிவித்துள்ளதாகவும், செந்தில் பாலாஜி சிகிச்சையில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை எனவும், அவர் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக கருதக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு போலீசாரின் அதிகாரம் வழங்காததால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை என கூற முடியாது எனவும், சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளதால், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
முடிந்தது முடிந்தது தான்: இதையடுத்து, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு மீது வாதங்களை முன் வைத்த டெல்லி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாட்கள் முடிந்தது; முடிந்தது முடிந்தது தான் எனக் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது எனவும், 15 நாட்கள் முடிந்து விட்டால் உலகம் முடிவுக்கு வந்து விடாது. வழக்கின் புலன் விசாரணையை தொடர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் தற்போதைக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முகுல் ரோத்தஹிக்கு பதில்: முகுல் ரோத்தஹி வாதத்துக்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவலில் வைத்து விசாரிப்பது அமலாக்கத் துறையின் உரிமை எனவும், காவலில் வைத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட போதும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். மேலும், அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
-
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications