டாக்டராகிறார் இசைஞானி இளையராஜா.. பட்டம் வழங்கி கெளரவிக்கும் பிரதமர் மோடி!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நாளை கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநா் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, பெங்களூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமா் மோடி விமானம் மூலம் மதுரை வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சின்னாளம்பட்டி கிராமத்திற்கு வரும் மோடி, காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு கார் மூலம் செல்கிறார்.

பாதுகாப்பு வளையத்தில் மதுரை
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மதுரை விமான நிலையத்திற்கு வருவதையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் மதுரை விமான நிலையத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரோன்களுக்கு தடை
இதனால் மதுரை மாநகர் மற்றும் விமான நிலையம் நிலையம் ஆகியவை பாதுகாப்பு மண்டலமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ட்ரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்திருந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

முதல்முறை
இதற்கு முன் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி, முராஜிதேசாய், ராஜீவ்காந்தி என 4 பிரதமர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வரும் 5-வது பிரதமர் மோடி என்பதால் அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்னொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்க உள்ளார். கடந்த ஜூலை மாதம் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னர் பிரதமர் மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்திக்காத நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications