ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன
சென்னை: எங்கள் பசங்க சொல்லி தான் விஜய்க்கு ஓட்டு போட்டோம்..! விஜய் ஆட்சிக்கு வந்தா டாஸ்மாக்ல கூடுதல் தொகை வாங்க மாட்டாங்கனு ஓட்டு போட்டோம்.. இன்னும் பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்கிட்டு தான் இருக்காங்க.. தயவு செய்து கடையையே மூடிடுங்க.. எங்க சொத்தெல்லாம் போகுது என்று அமைச்சர் முஸ்தபாவிடம் குடிமகன்கள் நேற்று பூந்தமல்லியில் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்களிடம் அமைச்சர் முஸ்தபா பேசும் போது, 10375 ரூபாய் தான் எங்களுக்கு சம்பளம்.. இந்த சம்பளத்தை வைத்து எப்படி நாங்கள் சமாளிப்பது என்று கேள்வி எழுப்பினார்கள். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
டாஸ்மாக்கில் 10 ரூபாய், 20 ரூபாய் அதிகம் வாங்குவது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் டாஸ்மாக் ஊழியர்கள் சொல்வதிலும் நடைமுறை உண்மை இருக்கிறது. அவர்கள் 23 வருடங்களாக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய கூடுதல் 10 ரூபாய் முக்கியமான காரணமாக இருக்கிறது.

ஏனெனில் டாஸ்மாக் ஊழியர்கள் யாரும் அரசு நிரந்தரப் பணியாளர்கள் கிடையாது. அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளமும் கிடையாது. அவர்கள் அனைவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியம் மற்றும் தற்காலிகப் பணியாளர்களாகவே நீடிக்கிறார்கள்.
அவர்களின் தற்போதைய தோராயமான மாதச் சம்பளம் என்பது மிக மிக குறைவு. கடை மேற்பார்வையாளருக்கு சுமார் ₹15,000 முதல் ₹18,000 வரை தான் சம்பளமாக கிடைக்கிறது. அதேபோல் டாஸ்மாக் கடையின் விற்பனையாளருக்கு சுமார் ₹12,000 முதல் ₹14,000 வரை தான் சம்பளம் கிடைக்கிறது. உதவி விற்பனையாளருக்கு சுமார் ₹10,000 முதல் ₹11,500 வரை தான் சம்பளம் கிடைக்கிறது.
இன்றைய விலைவாசியில், இந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு ஒரு குடும்பத்தை நடத்துவது மிகக் கடினம் என்பதால், "₹10 கூடுதல் கட்டணம்" என்பது அவர்களின் 'அறிவிக்கப்படாத கூடுதல் வருமானமாக' மாறிவிட்டது என்பது கள யதார்த்தம்.
ஒரு பாட்டிலுக்கு ₹10 வீதம், ஒரு நாளைக்கு 500 பாட்டில்கள் விற்கும் கடையில் உள்ள 3 ஊழியர்களுக்கு தலா ₹1,500 முதல் ₹2,000 வரை தினசரி ஊக்கத்தொகை கிடைக்கும். இது அவர்களின் மாதச் சம்பளத்தை விட 3 மடங்கு அதிகம் ஆகும். இந்த ₹10 கூடுதல் கட்டணம் என்பது வெறும் கடை ஊழியர்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை; அது மேலிடம் மற்றும் அரசியல் வட்டாரம் வரை 'கமிஷனாக'ச் செல்வதாகப் புகார்கள் உள்ளன. இப்படியான சூழலில் அரசு இந்த பிரச்சனை சரி செய்ய வேண்டும் என்றால், கண்டிப்பாக முதலில் டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும். அல்லது டாஸ்மாக்கில் விலையை அதிகரித்து, நியாயமான சம்பளம் வர அரசு உதவ வேண்டும். அப்படி செய்யாமல் இந்த பிரச்சனையை சரி செய்வது கடினம்.
அதேபோல் டாஸ்மாக் ஊழியர்கள் சொல்வது போல், கடைகளுக்கான செலவுகளை முழுமையாக வெளிப்படையாக கணக்குகள் உருவாக்கி, அதனை பராமரித்து அந்த பணத்தை டாஸ்மாக் நிர்வாகம் தர வேண்டும். மாறாக அதனை டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் காசில் செய்ய வேண்டும் என்பது எந்த வகையிலும் ஏற்புடையாது கிடையாது. இந்த விவகாரத்திற்கு முதல்வர் விஜய் நினைத்தால் ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். அவர் டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம், கட்டணம், மற்றும் நிர்வாக சிக்கல்களை அழைத்து பேசி சரி செய்துவிட முடியும். அது நடந்தால் தான் பிரச்சனை தீரும். அதுவரையில் இது தொடரவே செய்யும்.












Click it and Unblock the Notifications