"கறிக்கடைய" ஏன் மூடறீங்க மார்வாடி கொண்டாட்டத்துக்கு? பொங்கலுக்கு ராஜஸ்தானில் லீவு உண்டா? சீமான் நறுக்
சென்னை: மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சி உண்ண தடைவிதிப்பதென்பது அப்பட்டமான ஜனநாயகத் துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக அரசையும் விமர்சித்துள்ளார்.
ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதியான மகாவீரரின் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.. இது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும்.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தி தினமானது, மது விற்பனை இல்லாத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..

கறிக் கடை
அகிம்சையை போதித்தவர் மகாவீரர் என்பதால் ஒவ்வொரு வருடமும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டும் வருகிறது.. அந்தவகையில், நேற்றைய தினம் மகாவீரர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.. இதற்காக அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், வணிகத் தளங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்றவைகளுக்கும் விடுமுறை தரப்பட்டிருந்தது. மேலும் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டது.. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மதுபார்கள்
தமிழகத்திலுள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதையொட்டி உள்ள பார்கள் மற்றும் தனியார் ஓட்டல்களில் செயல்படும் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிரத்யேக உத்தரவினை பிறப்பித்திருந்தனர்.. அந்தவகையில், நேற்று இறைச்சி கடைகள், மதுக்கடைகள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன.. மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக இறைச்சிகடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இறைச்சி கடைகள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டுமென திமுக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மகாவீரர் போற்றுதலுக்குரியவர் என்பதிலோ, அவரது திருநாளைக் கொண்டாட வேண்டுமென்பதிலோ எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதனைக் காரணமாகக் காட்டி, இறைச்சிக்கடைகளை மூடச்சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. உணவு என்பது அவரவர் விருப்பவுரிமை; அதில் அரசு தலையிட்டுத் தடைசெய்வது என்பது பாசிசம்.

மார்வாடிகள்
இங்கு சமணத்தைத் தழுவி நிற்கும் மார்வாடி மக்களின் உணர்வுக்காகவே இறைச்சிக்கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. தமிழர்களின் திருநாளான பொங்கல் பெருவிழாவுக்கு ராஜஸ்தானில் எவ்வித விடுமுறையுமில்லாதபோது, மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக அவர்களது வசதிக்காகவும், உணர்வுக்காகவும் தமிழ்நாட்டிற்குள் இறைச்சிக்கடைகளை மூடுவது சரியானதல்ல!

கறி கடைகள்
மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சி உண்ண தடைவிதிப்பதென்பது அப்பட்டமான சனநாயகத் துரோகம். 'எல்லோருக்குமான அரசு' எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, ஒரு தரப்பினரை நிறைவுறச் செய்ய தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகளை மூடும் எதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது" என்று சீமான் தன்னுடைய அறிக்கையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார். சீமானின் இந்த முக்கிய அறிக்கையை நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications