அடிதூள்! 2 வருடங்களில் 2 லட்சம் உயிரைக் காப்பாற்றிய ஸ்டாலின்!
சென்னை: 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்' மூலம் விபத்துக்குள்ளான 2 லட்சம் பேரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது தமிழ்நாடு அரசு என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கடந்த 2021 ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

அதற்கு 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது என்பதைத் தாண்டி, அதனால் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன என்பது மிகப் பெரிய சாதனை.
ஒருவர் விபத்தில் சிக்கினால், அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் 48 மணி நேரத்தில் செய்யப்படும் முறையான சிகிச்சை மிகமிக முக்கியமானது. அதை மருத்துவ உலகம் Golden Hour என்று குறிப்பிடுகிறது.
அந்த 48 மணிநேர சிகிச்சை சரியாக மேற்கொள்ளப்பட்டுவிட்டால், அதன்பின் எந்தப் பயமும் தேவை இல்லை. அதை அடிப்படையாகக் கொண்டுதான் இதற்கு 'நம்மைக் காக்கும் 48' என்று பெயரிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அந்தத் திட்டம் வெறும் அறிவிப்பாக இல்லாமல் 2 லட்சத்து 7 பேர் உயிரை மீட்டுத் தந்துள்ளது. அந்த 2 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதிலும் எங்கே எல்லாம் விபத்துகள் அதிகமாக ஏற்படுமோ அந்த இடங்களை எல்லாம் கண்டறிந்து ஒரு பட்டியல் தயாரித்திருக்கிறோம்.

அந்தப் பட்டியலில் அதிகமாக விபத்துகள் ஏற்படும் இடங்கள் என்று 500 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஹாட் ஸ்பாட் மற்றும் ரெட் ஸ்பாட் என்று இரண்டு வகைகளாகப் பிரித்திருக்கிறோம். இந்த இடங்களை ஒட்டியே 692 மருத்துவமனைகளை இணைத்திருக்கிறோம்.
யார் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறாரோ அவரை அருகில் உள்ள இந்த மருத்துவமனைகளில் கொண்டு வந்து சேர்த்தால், அவர் உயிரைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் 48 மணிநேர சிகிச்சைக்கான செலவாக 1 லட்சம் ரூபாயை அரசே தருகிறது.

அதற்காக 'நம்மைக் காக்கும் 48' என்ற அற்புதமான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கித் தந்திருக்கிறார்.
முன்பு எல்லாம் ஒருவர் சாலையில் அடிப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால், அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, பரிதாபப்பட்டுக் கொண்டே சென்று விடுவார்கள். யாரும் அந்த உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு அடிப்பட்டவரை அழைத்துச் சென்று அனுமதித்தால், தேவையில்லாமல் காவல்துறை விசாரணையில் மாட்டிக்கொள்ள நேரிடம். தேவை இல்லாமல் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கவேண்டிய தேவை உருவாகும். ஆகவே அச்சப்பட்டு நமக்கு ஏன் வம்பு என்று சென்றவர்கள்தான் அதிகம்.

அதை மனதில் கொண்டுதான், முதல்வர் ஸ்டாலின் அடிப்பட்ட ஒருவரை அருகில் உள்ள மருத்துவமனையில் யார் கொண்டுவந்து சேர்க்கிறார்களோ அவர்களுக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை தருவோம் என்று அறிவித்திருக்கிறார்.

ஓர் உயிரைக் காப்பாற்றுபவருக்கு அரசு தரும் பரிசு அது. இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு காவல்துறை விசாரணையின்மீது இருந்த பயம் போய்விட்டது. பலரும் போட்டிப் போட்டு உயிரைக் காப்பாற்ற முன்வருகிறார்கள்.
இந்தளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் முதல்வரின் இந்த அறிவிப்புதான்.

இந்த 'நம்மைக் காக்கும் 48' திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. வரும் டிசம்பர் 18-ம் தேதி வந்தால் 2 வருடங்கள் சரியாக முடியப் போகிறது. இந்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரமாவது பயனாளியை சிட்லபாக்கம் மருத்துவமனையில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைப்போல 80 ஆயிரமாவது பயனாளியை நானே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்து சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தேன். அடுத்து ஒரு லட்சமாவது பயனாளியைச் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து தக்க உதவிகளைச் செய்தேன். ஒன்றரை லட்சமாவது பயனாளியை பூந்தமல்லி மருத்துவமனையில் சந்தித்தேன்.

இன்று 2 லட்சமாவது பயனாளியைச் சென்னை மருத்துவமனையில் சந்தித்து அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தேன். இந்த ஒரே நாளில் அந்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து ஏழாக உயர்ந்துள்ளது. ஒரே மருத்துவமனையில் இவர்கள் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் 48 மணிநேர சிகிச்சைக்கான செலவாக 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உயிர்க் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த 2 வருடங்களில் 2 லட்சம் பேர் உயிரை முதல்வர் ஸ்டாலின் தனது சிறப்பான திட்டத்தின் மூலம் காப்பாற்றித் தந்திருக்கிறார். வேறு எந்த மாநிலமும் இப்படியான சாதனையைச் செய்ததில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications