தமிழகத்தில் வீடுகளில் பைப் லைன் மூலம் வரப்போகும் கேஸ்.. மத்திய அரசின் மாஸ் திட்டம்
சென்னை: தமிழகத்தில் 2030க்குள் 2.20 கோடி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யப்படும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரிய தலைவர் அனில்குமார் ஜெயின் தெரிவித்தார்.
சென்னையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரிய தலைவர் அனில்குமார் ஜெயின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் ஐரோப்பாவிலும் 'பைப் லைன்' எனப்படும், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இது தான் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எல்.பி.ஜி., எரிவாயு ஆகியவற்றுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலை பாதிக்காது. மற்ற எரிபொருளுடன் ஒப்பிடும் போது செலவும் குறைவுதான்.

உலகில் இயற்கை எரிவாயு பயன்பாடு 25 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 6 சதவீதமாகவே உள்ளது. வரும் 2030க்குள் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், கச்சா எண்ணெயில் இருந்துதான் எல்.பி.ஜி. எனப்படும் சமையல் கேஸ் தயாரிக்கப்படுகிறது. இது, 100 சதவீதம் இறக்குமதியை சார்ந்திருக்கிறது. ஆனால் இயற்கை எரிவாயு 50 சதவீதம் உள்நாட்டில் கிடைக்கிறது; மீதி 50 சதவீதம் தான் இறக்குமதி செய்கிறோம்.
தமிழகத்தில் எண்ணுார், கேரளாவில் கொச்சி உட்பட பல இடங்களில், திரவ நிலை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில், இந்த முனையங்களுக்கு திரவ நிலையில் இயற்கை எரிவாயுவை எடுத்து கொண்டு வருகிறோம்.
அந்த எரிவாயு, இயற்கை எரிவாயுவாக மாற்றப்படுகிறது. அதை, குழாய் வழித்தடத்தில் வினியோகம் செய்ய, 'சிட்டிகாஸ் டிஸ்ட்ரிபியூஷன்' என்ற வினியோக நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்.
அந்நிறுவனங்கள், குழாய் வழித்தடத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயுவாகவும்; சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இயற்கை எரிவாயுவை வினியோகிக்க, 'டோரன்ட் காஸ், அதானி, ஏஜி அண்டு பி' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்.
தற்போது தமிழகத்தில் 17,000 வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வரும் 2030க்குள், 2.20 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். உள்ளாட்சி அமைப்புகள், குழாய் வழித்தடம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும். இயற்கை எரிவாயு பயன்பாடு தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications