அண்ணாமலை சொன்னது உண்மையல்ல.. தஞ்சை நாட்டியாஞ்சலி ரத்துக்கு காரணம் யார்? தமிழக அரசு பரபர விளக்கம்!
சென்னை: தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த திமுக அரசு அனுமதி மறுத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், தமிழக அரசுக்கும் நாட்டியாஞ்சலி ரத்துக்கும் தொடர்பில்லை, அனுமதி மறுத்தது மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறை தான் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு: அண்ணாமலை நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா என்பது, சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஆலயங்களில், பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதக் உள்ளிட்ட பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் பங்குபெறும் சிவராத்திரி தினத்தையொட்டிய நாட்டியப் பெருவிழா ஆகும். கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த விழாவில், உலகெங்கும் உள்ள நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று, தஞ்சைப் பெருவுடையாருக்கும், மாமன்னர் ராஜராஜ சோழனுக்கும் தங்கள் நடனத் திறனால் மரியாதை செய்வது மரபு.

இந்த ஆண்டு, நேற்றைய தினம் நடைபெற இருந்து நாட்டியாஞ்சலி விழாவுக்கு, இந்து மத விரோத திமுக அரசு அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆலய நடைமுறைகளிலும், இந்து மத நம்பிக்கையிலும் தொடர்ந்து தலையிட்டு வரும் திமுக, தற்போது ஒரு படி மேலாக, தஞ்சை பெருவுடையார் கோவில் நிகழ்வுகளிலும் தலையிட்டு, மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டாண்டு காலமாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கும் அனுமதி மறுத்திருப்பது, திமுகவின் இந்து மத வெறுப்பைக் காட்டுவதோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அடையாளமான தஞ்சாவூர் பெரிய கோவிலையும் அவமானப்படுத்தும் நோக்கத்தையும் காட்டியிருக்கிறது.
அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை: உடனடியாக, தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை, ஒவ்வொரு ஆண்டையும் போல, ஆலய வளாகத்திலேயே நடைபெற அனுமதிக்க வேண்டும் என்றும், திமுகவின் இந்து மத விரோதப் போக்கை, உலகெங்கும் இருந்து, தஞ்சாவூர் வந்து, பெருவுடையார் கோவில் வளாகத்தில் தங்கள் நடனத் திறன் மூலம் மரியாதை செலுத்த வந்திருக்கும் நடனக் கலைஞர்களிடத்தும், பக்தர்களிடத்தும், தங்கள் அராஜகப் போக்கினைக் காட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்: சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற இருந்த நாட்டியாஞ்சலி விழாவுக்கு, திமுக அரசு அனுமதி மறுத்ததால், விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது என அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், அண்ணாமலை தெரிவித்திருப்பது உண்மை அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், 'தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த அனுமதி மறுத்தது திமுக அரசு' என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது வதந்தி என்றும், நாட்டியாஞ்சலி நிகழ்வு ரத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும்ம் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தான் அனுமதி மறுத்தது: மேலும், "நாட்டியாஞ்சலி விழாவை தமிழ்நாடு அரசு ரத்து செய்யவில்லை. நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறைதான். தஞ்சை பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி அன்று நிகழ்ச்சிகள் நடத்த, இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது.

ஆகையால்தான், 20 ஆண்டுகளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி இந்த ஆண்டு நடைபெறவில்லை. எனவே, அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல!" என்று உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் கொடுத்துள்ளது. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தையும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications