கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி.. ரஜினியை வைத்து விஜய்யை மொத்தமாக முடித்துவிட்ட ஆதவ் அர்ஜுனா
சென்னை: தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்குள் விஜய்யைக் கூட்டணி வர செய்ய முயற்சிகள் நடந்தன. திரைமறைவில் இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்தது. இருந்த போதிலும், அந்த பேச்சுவார்த்தை இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணமே ஆதவ் அர்ஜுனா தான். அவர் சொன்ன சில கருத்துகள் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை நடத்திவிட்டது எனச் சொல்லலாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் சீக்கிரமே சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. இதற்காகத் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகச் சொல்லப்பட்டன.

சர்ச்சை
இப்போது அந்த முயற்சி முடிவுக்கு வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளே இதற்குக் காரணம். அதற்கு முன்பு வரை விஜய் குறித்து அமைதி காத்த பாஜக தலைவர்கள், இப்போது நேரடி விமர்சனத்தை முன்வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
பேச்சுவார்த்தை
கடந்த சில வாரங்களாக, தவெகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகப் பேச்சு அடிபட்டது. ஆளும் திமுகவுக்கு எதிராகப் பலமான கூட்டணி அமைக்க பாஜக இந்த முயற்சியை எடுப்பதாகச் சொல்லப்பட்டது. அதிமுகவுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் கூட பாஜக இந்த முயற்சியை எடுத்ததாக சொல்லப்பட்டது. இதற்காக விஜய்க்கு துணை முதல்வர் + 80 தொகுதிகள் கூட அளிக்க பாஜக ரெடியாக இருந்ததாகத் தெரிவித்தனர். இருப்பினும், முதல்வர் பதவி வேண்டும் என்பதில் விஜய் மிகத் தெளிவாக இருந்துள்ளார்.
இந்தத் தகவல்களை தவெகவினர் மறுத்தே வந்தனர். இருப்பினும், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விஜய் டெல்லியில் சிபிஐ முன்பு ஆஜரானபோது கூட்டணி குறித்த யூகங்கள் உச்சத்தை அடைந்தன. இந்தச் சூழலில் தான் தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய சில கருத்துகளைத் தெரிவித்தார். இது கூட்டணி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
கொந்தளிப்பு
அதாவது சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், திமுக குடும்பத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாலேயே ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகினார் என்று அர்ஜுனா குறிப்பிட்டார். ஆனால், திமுகவை எதிர்த்து விஜய் நிற்பதாகவும் விஜய்யின் மன வலிமை அந்தளவுக்கு அதிகம் என்பது போலப் பேசியிருந்தார். அவரது இந்த கருத்துகளே சர்ச்சைக்குக் காரணம். விஜய்யைப் புகழ வேண்டும் என்பதற்காக ரஜினியை அவமானப்படுத்தும் வகையில் பேசிவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர்.
பிறகு அரசியல் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளை நாகரீகமற்றவை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடினார். ரஜினிகாந்த்தின் ரசிகர் பட்டாளத்தை ஈர்க்கும் வகையில் அவருக்கு ஆதரவாக எடப்பாடி குரல் கொடுத்தார். எடப்பாடி மேலும், "ரஜினிகாந்த் அரசியலுக்கப்பாற்பட்டு மதிக்கப்படும் சினிமா பிரபலம். அவரது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுவது ஏற்க முடியாதது. அரசியலுக்கு வருவது என்பது தனிநபர் உரிமை. அரசியலுக்கு வராமல் இருக்க ரஜினி சொன்ன காரணங்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த கருத்துகள் அநாகரிகமானது" எனச் சாடினார்.
முடிவுக்கு வந்த கூட்டணி கணக்கு
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை பாஜகவின் அண்ணாமலையும் கண்டித்தார். ரஜினிகாந்த்தின் மதிப்பையும், மன வலிமையையும் புகழ்ந்த அண்ணாமலை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சபட்ச நிலையில் நீடிப்பது அசாதாரணமான மன வலிமையின் அடையாளம் என்றும் தெரிவித்தார். இது தவிர மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் என பலரும் ஆதர் அர்ஜுனாவை விமர்சித்தனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதுவரை விஜய் பற்றி பெரிதாக விமர்சிக்காத பாஜகவினர், மிகக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். இதன் மூலம் கூட்டணி பேச்சு முழுமையாக நின்றுவிட்டதாகவே தெரிகிறது. சுமார் 30 ஆண்டுகளாக அரசியல் பிரவேசம் குறித்த சஸ்பென்ஸ் காத்த ரஜினிகாந்த், உடல்நல பாதிப்பு காரணமாக, 2020இல் அரசியலுக்கு வரப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications