போலீசாரையே தாக்குகிறார்கள் போதை ஆசாமிகள்.. என்ன செய்யப்போகிறார் மு.க ஸ்டாலின்.. எடப்பாடி கொந்தளிப்பு
சென்னை: போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதனை தடுக்க காவல்துறையை கையில் வைத்திருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது. இந்த கோவில் திருவிழாவின் போது காவலர்கள் சிலரை இளைஞர்கள் தாக்குவது போல் வீடியோ வெளியானது. இந்த வீடியோவில், போதையில் இளைஞர் ஒருவர் போலீசாரை தாக்குவது போன்று பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இனி இது போன்ற சம்பவம் நடைபெறாத வண்ணம் காவல்துறையை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்த காரணத்தினால் பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை ஆசாமிகள் காவல்துறையினரையே பொதுவெளியில் தாக்கப்படும் சம்பவங்கள் கவலையளிக்கிறது.
கையாலகாத விடியா திமுக ஆட்சியாளர்களும், இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும் விழிபிதுங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது. இத்தகையவர்களால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கு பெரும் பயமும் அச்சமும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
என்ன செய்யப் போகிறார் காவல்துறையை கையில் வைத்திருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்? இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாவண்ணம் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து , சட்டம் ஒழுங்கை பாதுகாக்க விடியா திமுக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications