நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மார்க் எடுத்தவர்களுக்கும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர இடம்..ஷாக் தகவல்
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக (NEET PG exam) நடத்தப்படும் நீட் பிஜி தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும் தவறான விடை அளித்து மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. அதாவது, நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேர் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தனித்தனியாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைக்கும்.

நீட் தேர்வு ஏழை மாணவ - மாணவிகளின் மருத்துவக் கனவை சிதைக்கிறது எனக் கூறி தமிழ்நாடு இந்த நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல், நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள், தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில், நீட் தேர்வில் ஜீரோ மற்றும் மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேர் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்த போதும் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த 14 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. 800-ல் ஜீரோ மதிப்பெண் பெற்று, தரவரிசையில் 2 லட்சத்துக்கும் கீழ் இடம் பெற்றவர்களும் எம்.டி. படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல், ஜீரோவுக்கும் கீழ் மைனஸ் 40, மைனஸ் 25 உள்ளிட்ட மதிப்பெண்கள் பெற்ற 13 பேருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. வழக்கமாக போட்டித் தேர்வுகளில் ஜீரோ மதிப்பெண் பெற்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
50 சதவீத பர்சென்டைல் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றால் மட்டுமே நீட் முதுநிலை சேர்க்கையில் சேர முடியும் என்ற வரம்பு இருந்தது. ஆனால், முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் காலியிடங்கள் அதிகரித்ததால், 2023ஆம் ஆண்டு ஜீரோ பர்சென்டைல் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், நீட் தேர்வில் ஜீரோ அல்லது அதற்கு கீழ் மதிப்பெண் எடுப்பவர்களும் எம்.டி. படிப்பில் சேரும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications