போக்குவரத்து ஊழியர்களுக்கு விரைவில் “குட் நியூஸ்”.. ஊதிய உயர்வு தொடர்பாக ஆகஸ்ட் 27ல் பேச்சுவார்த்தை!
சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆகஸ்ட் 27ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் போக்குவாத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. 7 முறை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு பற்றி பேச 14 பேர் கொண்ட குழு போக்குவரத்து ஆணையம் தரப்பில் அமைக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினரும் வரவேற்ப்பு தெரிவித்தனர். இதனால் விரைவில் சுமுகமாக முடிவுகள் எட்டப்படும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போனது. இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
தேனாம்பேடையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் சங்கம் சார்பில் 8வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
27 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அனைத்து போக்குவரத்து மேலான் இயக்குநர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு தொடர்பாக இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27 -ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகளுடன் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications