வரலாற்றை மாற்றிய நேபாள் GEN Z தலைமுறை.. தலைவர்களின் தலையெழுத்தை மாற்றிய #Nepo_Baby! முழு அலசல்!
காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை மற்றும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் நேபாள நாட்டின் தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைமறைவாகியுள்ளனர். தற்போது சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பை ராணுவம் கையில் எடுத்துள்ளது. நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகி இருக்கும் நிலையில், இந்த போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன? போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? போராட்டத்தின் தீவிரம்? அடுத்து என்ன நடக்கும்? யார் போராட்டத்தை நடத்துகிறார்கள்? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விரிவாக பார்க்கலாம்..
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் பல ஆண்டுகாலம் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் அங்கு மக்களாட்சி மலர்ந்தது. அதே நேரத்தில் பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட பலர் மீது ஊழல் புகார்கள் எழுந்தது.
இதனால், உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் நேபாளம் முன்னணிக்கு வந்தது. இதற்கிடையே அங்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கு ஒரு காரணமும் உண்டு..

நேபாளத்தில் வன்முறை
கடந்த சில தினங்களாகவே நெப்போ கிட்ஸ், நெப்போ பேபி ( #Nepo Baby and #Nepo Kids) உள்ளிட்ட ஹேஷ்டேக் நேபாளத்தில் டிரெண்டானது.
அதாவது மக்கள் வேலையில்லா திண்டாட்டம், வறுமை உள்ளிட்டவற்றால் திண்டாடிக் கொண்டிருக்க அரசியல்வாதிகளின் பிள்ளைகள் உல்லாச வாழ்க்கை வாழ்வது, சொகுசு கார்களில் பயணிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதை அடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஷாப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு தடை செய்தது. மக்களின் குரலை ஒடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறிய திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் GEN Z எனப்படும் இளைய தலைமுறை.

போராட்டம் எப்படி தொடங்கியது?
நேபாள அரசு திடீரென வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை தடை செய்தது.
காரணம், அவை நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்யப்படவில்லை என அரசு கூறியது
ஆனால், மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ள நிலையில் ஊழலுக்கு எதிரான மக்களின் குரலை அடக்கும் முயற்சி எனக் கருதப்பட்டது.
இந்த தடை கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு திரும்பப் பெறப்பட்டாலும், இளைஞர்களின் ஆத்திரம் வெடித்துப் போராட்டமாக மாறிவிட்டது.

வன்முறையாக மாறிய போராட்டம்
நேபாளத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த மோதல்களில் மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். போலீசார் தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போரட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.
போராட்டத்தின் உச்சமாக கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கே தீ வைத்தனர். அதேசமயம், நேபாள காங்கிரஸ் தலைமையகம் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் டியூபாவின் வீடும் தாக்கப்பட்டது.
இதுவரை மொத்தமாக 22 பேர் உயிரிழப்பு பதிவாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுமார் 200 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பெரும்பாலும் துப்பாக்கிச்சூடு மற்றும் ரப்பர் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் கத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளது.

போராட்டத்தை யார் வழிநடத்துகின்றனர்?
நேபாளத்தில் இந்த போராட்டம் தன்னெழுச்சியாகவே இளைஞர்களால் தான் வழிநடத்தப்படுகிறது. இதுவரை போராட்டத்தை எந்த ஒரு அரசியல் கட்சியோ, தலைவர்களோ நேரடியாக கட்டுப்படுத்தவில்லை.
நேபாளத்தின் போராட்டக்காரர்கள் தங்களை "ஜெனரேஷன் Z" (Gen Z) என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
பலர் பள்ளி, கல்லூரி சீருடைகளுடன், புத்தகங்களை கையில் ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
கத்த்மாண்டு மேயர் பாலன் ஷா மட்டும் இந்த போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அரசியல் நபராக உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

கோரிக்கைகள் என்ன?
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கை இரண்டே இரண்டு தான் சமூக ஊடக தடைகளை நீக்க வேண்டும் என்பது அது ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டது
மேலும் அரசியல் தலைவர்கள் ஊழல் முறைகேடுகளை நிறுத்தி அதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் நாட்டில் உள்ள ஊழல் நெப்போல்டிசம் எனப்படும் வாரிசு அரசியல் அதிகாரிகளின் பொறுப்பில்லாத்தனம் ஆகியவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான்
பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்த அரசியல்வாதிகள் பதவிக்கு வந்த பிறகு அவற்றை செயல்படுத்தவில்லை. சமூக வலைதள தடை மூலம் இளைஞர்களின் குரலை நசுக்க முடியாது. ஜெனரேஷன் Z தலைமுறை இத்தோடு நின்று விடாது என்கின்றனர் மாணவர்கள்.
போராட்டத்தை வழிநடத்துவது யார்?
இந்தப் போராட்டத்தை வழி நடத்துவதற்கோ அல்லது கூட்டத்தை திரட்டுவதற்கு என்று தனியாக யாரும் செயல்படவில்லை.
சமூக வலைதளங்களில் ஹாஷ் டேங்க் மூலம் தான் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது அமைதியை நிலைநாட்டவும் பேச்சுவார்த்தை நடத்தவும் ராணுவம் தயாராக இருக்கிறது என நேபாள ராணுவ ஜெனரல் அசோக் ராஜ் சிக்தெல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் யாருடன் அவர்கள் பேசுவது என்பதுதான் இப்போதைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது.
களம் இறங்கிய ராணுவம்
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி ராஜினாமா செய்திருக்கும் நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி சட்டம் ஒழுங்கை ராணுவம் கையில் எடுத்திருக்கிறது.
போராட்டங்கள் என்ற பெயரில் சிலர் பொது சொத்துகளுக்கும் அரசு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தி வருகின்றன அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவம் தயார் எனக் கூறியிருக்கிறார் ராணுவ ஜெனரல் அசோக் ராஜ் சிக்தெல்.
அடுத்து என்ன நடக்கும்?
பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் யார் தலைமையேற்று அந்த நாட்டை நெறிப்படுத்துவார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
பல அமைச்சர்கள் தலைமறைவாகி இருக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் ராணுவ ஆட்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அமைதியான போராட்டம் வன்முறையாக மாறி இருக்கும் நிலையில் ராணுவம் களமிறங்கினால் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் எனவும் மோதல் மேலும் தீவிரமாகும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே நேரத்தில் நீதித்துறை இந்த விஷயத்தை கையில் எடுத்து அரசியல் மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. மாணவர்கள், பொதுமக்கள் அரசியல் களத்தில் இறங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
அரசுக்கு சவால்
நேபாளத்தில் சமூக ஊடக தடையை எதிர்த்து தொடங்கப்பட்ட இந்த போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கும் நிலையில், நேபாளத்தில் மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்பட்டு தற்போது ஆளும் தரப்புக்கு அது சவாலாக மாறி இருக்கிறது.
ஊழல், குடும்ப அரசியல், சமத்துவமின்மை உள்ளிட்ட குற்றசாட்டுகளை போராட்டக்காரர்கள் முன் வைத்திருக்கும் நிலையில் அரசு மக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்குமா? அல்லது போராட்டம் மேலும் தீவிரமா? என்பதுதான் தற்போதைய கேள்வி.












Click it and Unblock the Notifications