இதுக்கு பாஜகதான் காரணம்! அப்ப உங்க கட்சிக்கு எதிராக நீங்களே ஆர்ப்பாட்டமா?.. பாஜக அண்ணாமலைக்கு கேள்வி
சென்னை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய பாஜக அரசு , அப்படியிருக்கும் போது அவற்றின் விலையை குறைக்க வேண்டும் என பாஜகவே போராட்டம் நடத்துவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பெரும் கிண்டலுக்குள்ளாகி வருகிறது.
Recommended Video
பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதால் அன்றாடம் அந்த நிறுவனங்கள் விலையை நிர்ணயித்து வருகின்றன. இவ்வாறு கச்சா எண்ணெய்யை காரணம் காட்டி பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் கணக்கில் உயர்த்தப்படும்.
ஆனால் கச்சா எண்ணெய் குறைந்தால் பெட்ரோல் டீசல் விலை பைசா கணக்கில் குறைக்கப்படும். இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 100 க்கு மேல் சென்றுவிட்டது.

கடுமை
இதனால் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்வோரும், வியாபாரம் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, எளிய குடும்பத்தினர், அன்றாடம் கூலி பெறும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பெட்ரோல் டீசல் விலை என்பது பேரிடியாக இருக்கிறது.

சிலிண்டர் விலை
இது ஒருபுறமிருக்க கேஸ் சிலிண்டர்களின் விலையும் 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. இதனால் இல்லத்தரசிகள் செய்வதறியாது இருக்கிறார்கள். எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ 5 குறைக்கப்படும் என்றும் டீசல் விலை ரூ 3 குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ரூ 4000
இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை குறைப்பு, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரணம் ரு 4000 உள்ளிட்டவற்றை வழங்கிய போது பெட்ரோல் டீசல் விலை எப்போதும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் 2014 ஆம் ஆண்டு ரூ 9.48 ஆக இருந்த பெட்ரோல் வரியை ரூ 21.48 ஆக பாஜக உயர்த்தியது.

96 சதவீதம்
இந்த வரியில் 4 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மீதமுள்ள 96 சதவீத வரியை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இதனால் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது என்றார். இதையடுத்து பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு கடந்த பொது பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3 குறைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ஆர்ப்பாட்டம்
ஆனால் ரூ 5 குறைப்பதாக கூறிவிட்டு ரூ 3 குறைத்துள்ளதற்கும் டீசல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசு வரியை குறைத்தால்தான் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறையும் என்ற நிலையில் வரும் 22 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கிண்டல்
இவரது அறிவிப்பு சமூகவலைதளங்களில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை மத்திய பாஜக அரசுதான் குறைக்க வேண்டும். அப்படியிருக்கையில் தமிழக பாஜகவோ பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே முழங்கால் அளவுள்ள நீரில் அண்ணாமலை, கரு நாகராஜனும் படகு பயணம் செய்ததும், முழங்கால் அளவுள்ள நீரில் ரப்பர் டியூப் மூலம் மக்களை மீட்பது போல் எம்எல்ஏ காந்தி நாடகம் போட்டதாகவும் சமூகவலைதளங்களில் கிண்டலுக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications