உதயநிதி ஸ்டாலினின் புதிய முயற்சி! துணையாக நிற்கும் துரைமுருகன்! பரபரக்கும் அதிகாரிகள்!
தொகுதி மீது தனிக்கவனம் செலுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுக்கும் ஒரு புதிய முயற்சிக்கு அமைச்சர் துரைமுருகன் பக்கபலமாக துணை நிற்கிறார்.
இதுமட்டுமல்லாமல் அமைச்சர் மெய்யநாதனும் உதயநிதியின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் முக்கிய உயர் அதிகாரிகளை அழைத்து பேசிய துரைமுருகன் சில அதிரடி இன்ஸ்ட்ரக்ஷன்களையும் போட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி
திமுக இளைஞரணிச் செயலாளராக கட்சிப் பணிகளையும், அமைச்சராக ஆட்சிப் பணிகளையும் கவனித்து வரும் உதயநிதி ஸ்டாலின், ஒரு எம்.எல்.ஏ.வாக தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிப் பணிகளையும் கவனித்து வருகிறார். சென்னையில் இருக்கும் போது தனக்கு துறை ரீதியான நிகழ்ச்சிகள் இல்லாதபட்சத்தில் தொகுதிக்குள் ஒரு ரவுண்ட் அடித்து விடுகிறார். இந்நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை புதுப் பொலிவு பெற வைக்கும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார்.

பக்கிங்காம் கால்வாய்
அந்த வகையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பக்கிங்காம் கால்வாயை தூய்மைப்படுத்தி கரையோரப் பகுதிகளை அழகுப்படுத்தும் அற்புத முயற்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கியிருக்கிறார். உதயநிதியின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பொருட்டு அவருக்கு துணையாக நிற்கும் துரைமுருகன், நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் வரவழைத்து பக்கிங்காம் கால்வாய் புனரமைப்பு தொடர்பாக சில அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறார்.

அமைச்சர் மெய்யநாதன்
அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் உதயநிதிக்கு துணை நின்று இந்தப் பணிகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சுற்றுலா பொருட்காட்சி திடல் பின்பிருந்து மயிலாப்பூர் வரையிலான அடையாறு-கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயினை புனரமைப்பு செய்வதோடு, அதனை அகலப்படுத்தி,கரையோரப் பகுதிகளில் உள்ள சுற்றுப்பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுபடுத்த வேண்டும் என்பது உதயநிதியின் விருப்பமாக உள்ளது.

கால அவகாசம்
இந்த திட்டத்தை பொறுத்தவரை செய்து முடிப்பதற்கு சற்று கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டாலும் அது எதிர்காலத்தில் உதயநிதிக்கு மிகப் பெரும் பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பக்கிங்காம் கால்வாய் புனரமைப்பு மற்றும் கரையோரப் பகுதிகள் அழகுப்படுத்துதல் பணிகளை உதயநிதியே நேரடியாக முன்னெடுத்துள்ளதால் விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications