பார்க்கிங் ரூல்ஸ் மாறியது.. 3300 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு 2 கார் பார்க்கிங் அவசியம்: அரசாணை
சென்னை: சொந்தமாக வாகனம் வாங்குவோருக்குதான், பார்க்கிங் வசதியின் அருமை புரியும்.. பாடுபட்டு சேர்த்த பணத்தில் வாகனத்தை வாங்கி, அதை பாதுகாப்பாக நிறுத்தக்கூட முடியாமல் தவிக்கும் நபர்கள் பலருண்டு.. தெருவோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு என்பதும் நிச்சயமில்லாத நிலைமை உள்ளது.. இதனால் போக்குவரத்து நெரிசல் பெருகி, அண்டைவீட்டுக்காரர்களுடன் தேவையில்லாத அதிருப்திகளும் வெடிக்க காரணமாகிவிடும்.. இந்நிலையில்தான், பார்க்கிங்கில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அப்பார்ட்மென்ட்கள், வணிக கட்டடங்கள், நிறுவன கட்டடிங்களில் வாகன நிறுத்தம் என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. .

எனவே, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு, வீடு கட்டும்போது கட்டாயம் பார்க்கிங் வசதி மேற்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது..
தனி வீடுகளுக்கு வாகன நிறுத்துமிடம்
ஆனால், இந்த விதிகள் தனி வீடுகளுக்கு பொருந்துமா என்பதில் குழப்பம் நிலவியது. இதை கருத்தில்கொண்டு, தனி வீடுகளுக்கு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக விதிகள் வகுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அந்த வகையில் இப்போது விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில், 2 கார் மற்றும் 2 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவதை கட்டாயமாக்கும் வகையில், பொது கட்டிட விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது..
பார்க்கிங் வசதி
அதில், "பொது கட்டட விதிகளில் தனி வீடுகளுக்கான வாகன நிறுத்துமிடம் தொடர்பாக, சில பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, 3,300 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள தனி வீடுகளில், இரண்டு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடத்தை ஒதுக்க வேண்டும். இதேபோன்று, 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள வீடுகளில், நான்கு கார் நிறுத்துமிடம், நான்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும்.
அப்பார்ட்மென்ட் கட்டிடங்கள்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில், இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதை கருத்தில் வைத்து, ஐ.பி.எஸ்., எனப்படும், 'இன் பில்டிங் சொல்யூஷன்ஸ்' என்ற தலைப்பில், இணையதள சேவை மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் அமைக்கலாம்.
இதில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்ட முகவரை பயன்படுத்தி, தொலைத் தொடர்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம் என, பொது கட்டட விதிகள் திருத்தப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications