தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி? எதற்கெல்லாம் தடை? முழு விவரம்
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு எனப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைமைச் செயலாளர், பல துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தற்போது அறிவித்துள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இரவு ஊரடங்கு
அதன்படி தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் தனியார்/ பொது பேருந்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்கு அனுமதி இல்லை. மேலும், இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. அவசர மருத்துவ தேவை, விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகள்
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், மருந்தகம், பத்திரிகை விநியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்த்தி போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு வானங்கள், எரிபொருள் வானங்கள் ஆகியவையும் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு ஊரடங்கு
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை. அதேநேரம் அத்தியாவசிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். அதற்கு எவ்வித தடைகளும் அறிவிக்கப்படவில்லை.

உணவகங்கள்
முழு ஊரடங்கு நாளில் உணவகங்கள் காலை 6-10, பகல் 12 -3, மாலை 6 - 9 வரை பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி இல்லை.

திருண நிகழ்வுகளுக்குக் கட்டுப்பாடுகள்
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண நிகழ்வுகளில் 100 பேர், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலா தலங்கள்
அனைத்து நாட்களிலும் மாநிலத்திலுள்ள அனைத்துச் சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% வீட்டிலிருந்த பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9 மணி வரை மட்டும்
தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், வணிக வலாகங்கள், ஷோ ரூம்கள், நகை மற்றும் ஜவளி கடைகள் ஆகியவை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் 50%இல் செயல்பட அனுமதி. இவை அனைத்தும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதம் சார்ந்த நிகழ்வுகள்
மதம் சார்ந்த திருவிழாக்கள், கூட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால், 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. அதேநேரம் செயல்முறைத் தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும். கல்லூரி, பல்கலைக்கழக பாடங்களை ஆசிரியர்கள் ஆன்லனை மூலம் எடுக்க வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் மட்டும் நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடைக் கால முகாம்கள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications