புதிய டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பாஜகவுக்கு நெருக்கமானவர்.. பகீர் கிளப்பும் எஸ்டிபிஐ புகார்
சென்னை: நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு டி.என்.பி.எஸ்.சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில் சர்ச்சை எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பாஜகவுடன் நெருக்கமானவர் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவாளரை நியமித்து ஆளுநரின் இழுப்பிற்கு திமுக அரசு பணிந்துள்ளது என நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள அரசுப் பணிகளில் காலியாகும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் செயல்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சியில், ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் அரசின் பரிந்துரைப்படி, ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடந்த 2022 ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.

இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி முதல், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழக அரசு ஆகஸ்ட் 13 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆளுநர் ஒப்புதலை அடுத்து, டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்கே பிரபாகரை நியமித்தது தமிழக அரசு. 1989 பேட்ச் ஐ.ஏஅ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின் போது, அவரது செயலாளர்களில் ஒருவராக பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். கடந்த 2021-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். பின்னர், வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டார்.
இந்தச் சூழலில் தான் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு வந்துள்ளார் எஸ்கே பிரபாகர். இந்நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பாஜகவுடன் நெருக்கமானவர் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவாளரை நியமித்து ஆளுநரின் இழுப்பிற்கு திமுக அரசு பணிந்துள்ளது என நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவர் பதவி நீண்டநாட்கள் நிரப்படாமல் இருந்த நிலையில், வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகரை அதன் தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பாஜகவுடன் நெருக்கமானவர் என்றும், செயல்திறன் இன்மையால் அவர் உள்துறை செயலாளர் பதவியில் இருந்தும் மாற்றப்பட்டார் எனவும், இத்தகைய நபரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர் உள்பட பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கும் நிலையில், தமிழக அரசு ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக்க முயற்சித்தது. ஆனால், ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போட்ட காரணத்தால் நீண்ட காலம் அந்த பதவிக்கு யாரையும் பரிந்துரை செய்யாமல் இருந்த நிலையில், தற்போது பாஜக ஆதரவாளர் என கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகரை தலைவராக பரிந்துரை செய்து, ஆளுநரின் ஒப்புதலை பெற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பாஜக ஆதரவாளரை நியமித்து ஆளுநரின் இழுப்பிற்கு திமுக அரசு பணிந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
திமுக அரசின் பாஜக எதிர்ப்பும், ஆளுநர் எதிர்ப்பும் சமீபகாலமாக சமரசம் செய்யப்பட்டு வருகின்றது. தமிழக மக்களை ஏமாற்ற வெறும் உதட்டளவில் மட்டுமே அந்த எதிர்ப்புகள் உள்ளன. மாறாக பாஜகவுக்கு அனுசரணையான நடவடிவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதன் உதாரணங்களில் ஒன்றுதான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி நியமனம் என்பதை அறிய முடிகிறது.
ஆளும் அரசின் கூட்டணி கட்சி கூறியிருப்பது போன்று சமூக நீதியை செயல்படுத்த வேண்டிய முக்கியமான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பை, பாஜக ஆதரவாளருக்கு அளித்திருப்பது வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சமூகநீதி சிந்தனையுள்ள ஒரு கல்வியாளரை நியமிக்க திமுக அரசு முன்வர வேண்டும். மேலும், தேர்வாணையத்தின் உறுப்பினர்களில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்கிற நீண்டகால கோரிக்கையை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications