2024-ம் ஆண்டின் முதல் நாள்.. கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு.. அதிகாலையில் குவிந்த மக்கள்
சென்னை: 2024ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று 2024ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்ற விருப்பத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.
வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றுள்ளனர். மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிறையட்டும் என ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்தப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை சாலையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகம் பொங்க கோஷம் எழுப்பிய இளைஞர்கள், பொதுமக்கள், சிறுவர்கள், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்தனர். அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. புத்தாண்டையொட்டில் பலரும் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டி கோவில்களில் பிரார்த்தனை செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டு தலங்களில் மக்கள் குவிந்தனர். அங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர். குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இதற்காக பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் குளித்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புதுச்சேரி மணக்குள் விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்றனர். இதேபோல் நாகை வேதாரண்யேஸ்வரர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவில் நடந்த திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். கடலூர் விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல் 2024 புத்தாண்டையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 2024 ஆம் ஆண்டின் முதல் நாளை வரவேற்க தமிழகத்தில் கன்னியாகுமரியில் சூரிய உதயதத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரி திரிவேணி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.












Click it and Unblock the Notifications