விஜய் ஜெயிப்பாரா? ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பை கிழித்து தொங்கவிட்ட நிர்மலா பெரியசாமி
சென்னை: விஜய் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஆசிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியிட்ட நிலையில் அதிமுக நிர்வாகி நிர்மலா பெரியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காசு இருந்து கட்டமைத்தால் எப்பேற்பட்ட அயோக்கியர்களையும் நீங்க ஹீரோ ஆக்கிடுவீங்களா.. மக்களை பற்றியே நினைக்காதவர்களை பெரிய தலைவர் ரேஞ்சுக்கு மாத்திவிடுறீங்கள் என பேசியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறின. அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 2 நிறுவனங்கள் கூறின. ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் விஜய்யின் தவெக 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியிருந்தது. இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரான நிர்மலா பெரியசாமியிடம் ”ஒன்இந்தியாதமிழ்” யூடியூப் சேனல் பேட்டி கண்டது. அப்போது அவர் கூறியதாவது:-

இது எல்லாமே பெய்டு நியூஸ் ஆகவே கொஞ்ச நாட்களாக வந்து கொண்டிருந்தது. இது எல்லாம் ஒரு செட் அப் தான்.. ஆனால் தேர்தலே நடந்து முடிந்துவிட்டது. அதற்கு பிறகு இப்படி எல்லாம் சொல்வதனால் என்ன பிரயோஜனம் என தெரியவில்லை. எனக்கு உள்ளுணர்வில் ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது. அதில் குறிப்பிட்ட சேனல் ஒன்று தவெக ஆட்சி அமைக்கும் என கூறியிருப்பது தான்.
120 சீட் வாங்கும் என ஒரு அப்பட்டமான, அபாண்டமான ஒரு விஷயத்தை சொல்லியிருப்பதை பார்க்கும் போது, இதற்கு பின்னால், இதன் பின்புலம் என்ன என்று பார்த்தால், திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிய வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் இந்த மாதிரி செட்டப் பண்ணியிருக்காங்க என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஆனாலும் இதனை தேர்தல் ரிசல்டுக்கு பிறகு பார்ப்போம்.
எல்லாரிடமும் பேசியபோது தெரிந்தது என்னவென்றால், மே 4 ஆம் தேதி 12 மணிக்குள் தெரிந்துவிடும். 5 மணிக்கு கிளியராக தெரிந்துவிடும். அதுவரைக்கும் என்ன அவசரம். விஜய் முதல்வராக இருந்தால் நல்லதா? இல்லை எடப்பாடி முதல்வராக இருந்தால் நல்லதா?.. விஜய்க்கு எல்லாம் வாக்களித்துவிட்டு அதை பெருமை என்று சொல்பவர்களை என்ன என்று சொல்வது. படிப்படியாக வந்தால் தான் நல்லது. எல்கேஜி முடித்தவுடன் நான் டாக்டர் ஆவேன் என்றால் எப்படி?.. ரொம்ப கவலையாக இருக்கு. இப்போது உள்ள இளைஞர்களை நினைத்தால் ரொம்ப கவலையாக இருக்கு.
டேன்ஸ் ஆடத் தெரிந்தால் போதுமா நாடை ஆள்வதற்கு.. ஒரு துக்கம் கேட்பதற்கு கூட தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்தவர் அவர். ஒரு பிரசாரத்திற்கு கூட போக பயந்தவரை எப்படிப்பா ஆட்சியில் வைக்க முடியும். கொஞ்சம் கத்துக்கிட்டு வாங்க.. இவர்களை எல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட முடியாது. அவரும் நடிகர் தான். ஆனால் விஜய் வந்து எம்ஜிஆரின் வள்ளல் தன்மைக்கு கால் தூசிக்கு பெற மாட்டார்.
அவருடைய உழைப்பிற்கு விஜய் கால் தூசிக்கு பெறமாட்டார். அவர் வேறு.. இவர் வேற.. கடுமையாக உழைத்த, மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு எடப்பாடி தான் வரவேண்டும். எடப்பாடியை தவிர மற்ற யாராவது ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகிடும். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது.
கருத்துக்கணிப்புகள் எல்லாத்தையும் கருத்து திணிப்பாகத்தான் நான் பார்க்கிறேன். இதைப்பற்றி பேசவே பிடிக்கவில்லை. ஒரு நிறுவனம் 120 சீட் ஜெயிக்கும் என சொல்வதை எப்படி ஏற்க முடியும். இது ஒருவேளை நடக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும். தேர்தலுக்கு பிறகு விஜய் வெற்றி பெறுவார் என கட்டமைக்கப்படுகிறது. இதையெல்லாம் யார் செய்கிறார்கள், எதுக்காக செய்கிறார்கள். 120 சீட் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள், பின்புலம் என்ன என்று எல்லாரும் கேட்க வேண்டும்.
120 சீட் போட்டிங்க.. அது தேர்தலில் நடக்கு, நடக்காமல் போகுது.. ஆனால் நடக்கவில்லை என்றால் உங்களை என்ன செய்வது.. தவறுக்கு மேல் தவறாக போகுது.. எந்த சேனலை திறந்தாலும் சிரிச்சுக்கீட்டே இருக்கீங்க.. எந்த சோஷியல் மீடியாவை திறந்தாலும் அப்படியே இருக்கு. அப்போ காசு இருந்து கட்டமைத்தால் எப்பேற்பட்ட அயோக்கியர்களையும் நீங்க ஹீரோ ஆக்கிடுவீங்க.. மக்களை பற்றியே நினைக்காதவர்களை பெரிய தலைவர் ரேஞ்சுக்கு மாத்திவிடுறீங்க.. ஒரு ஜெனரேஷன் வீணாகப் போகிறதை பார்த்து கவலையாக இருக்கிறது.. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications