தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டீர்கள்.. ஸ்டாலின் மீது நிர்மலா சீதாராமன் விமர்சனம்
சென்னை: கண்மூடித்தனமான வெறுப்பு, மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தொகுதிப் பங்கீட்டையும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது. குறுகிய பார்வை கொண்ட, பிடிவாதமான, தொலைநோக்கற்ற, பெண்களுக்கு எதிரான திமுகவினால், தமிழகம் ஆதாயமடைவதற்குப் பதிலாக இழப்புகளைச் சந்திக்க உள்ளது என பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், "காங்கிரஸ், ராகுல் காந்தி, ஸ்டாலின் தலைமையிலான வெறுப்பு நிறைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவ வாய்ப்பைத் தமிழகம் இழக்கச் செய்துள்ளது என்பதைச் சிறப்பாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியுள்ளார்.

கண்மூடித்தனமான வெறுப்பு, மாநிலத்திற்குக் கிடைக்கவேண்டிய நியாயமான தொகுதிப்பங்கீட்டையும் பெண்களுக்குக் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது. குறுகிய பார்வை கொண்ட, பிடிவாதமான, தொலைநோக்கற்ற, பெண்களுக்கு எதிரான திமுகவினால், தமிழகம் ஆதாயமடைவதற்குப் பதிலாக இழப்புகளைச் சந்திக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்த இருதரப்புக்கும் பலனளிக்கும் திட்டத்தில் நீங்கள் பங்கெடுக்க மறுத்து, தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டீர்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்த விவாகரத்தில் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் வெளியிட்ட ட்வீட் பதிவில் கூறுகையில், "தமிழ்நாடு தனது அரசியல் வலிமையையும், தனக்குக் கிடைக்க வேண்டிய 20 கூடுதல் நாடாளுமன்ற இடங்களையும் அதிகரிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, இடங்களை 50% உயர்த்துவதற்கு வழங்கிய அந்தப் பொற்கால வாய்ப்பை நாம் இழந்தது மட்டுமல்லாமல்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஒரு பொம்மையைப் போலச் செயல்பட்டு, இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக அதை எதிர்த்தீர்கள்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற இடங்களை இழந்திருப்போம். உங்கள் மதியற்ற எதிர்ப்பின் காரணமாக, இப்போது 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும். இதனால் தமிழ்நாடு இன்னும் கூடுதலான நாடாளுமன்ற இடங்களை இழக்கும் நிலை ஏற்படும்.
மேலும், 1998-இல் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் தலைமையின் கீழ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில், உங்களது இப்போதைய 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் அந்த மசோதா நிறைவேறாமல் பார்த்துக் கொண்டன. இந்த முறையோ, நீங்கள் அந்த மசோதாவை எதிர்த்ததன் மூலம் அதன் நோக்கத்தையே சிதைத்துவிட்டீர்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.
மு.க. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதைக் கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய பாதிப்பையா அல்லது பெண்கள் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் பாழாக்கியதையா?" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அத்துடன் டேட்டா ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். அதில் மாநில வாரியாக எவ்வளவு இடங்கள் உயர்ந்து இருக்கும் என்பதை எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.














Click it and Unblock the Notifications